வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களை பிடித்து, மத்தியில் எப்படியும், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ.,வை, ஆட்சியில் அமர்த்தி விட வேண்டும் என்பதில், அந்தக் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அதனால், மற்ற கட்சிகளை விட, தேர்தல் வேலையில், பா.ஜ., தீவிரமாக உள்ளது.
தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய ஒரு குழுவை யும், பிரசாரத் திட்டங்களை வகுத்து, அதை சிறப்பாக செயல்படுத்த மற்றொரு குழு என, இரு குழுக்களை அமைத்துள்ளதோடு, கட்சி சின்னமான, தாமரையை, மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த, பல வகையான பிரசார திட்டங்களையும் தீட்டி, செயல்படுத்தி வருகிறது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பா.ஜ.,வுடன் அணி சேர உள்ள கட்சிகள் எவை, எவை என்பது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டாலும், முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்கு பிறகே, வெளியாகும் என, நம்பப்படுகிறது.அதேநேரத்தில், தாங்கள் போட்டியிட வேண்டிய தொகுதிகள் எவை என்பதையும், தமிழக பா.ஜ., தலைவர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்காக, கட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஒரு குழு, தமிழகம் முழுவதும், சென்று மக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளது. அத்துடன், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பதும், பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனம் மூலம் கண்டறியப்பட்டு, அதன் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.இதனடிப்படையில், கன்னியாகுமரி, தென்காசி, கோவை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, திருச்சி, தென் சென்னை என, 10 தொகுதிகளில், பா.ஜ., போட்டியிட்டால், நிச்சயம் வெற்றி பெறும் என, நம்பப்படுவதால், அந்தத் தொகுதிகளில், தீவிர பிரசார பணிகளை மேற்கொள்ளும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:முந்தைய தேர்தல்களில், எங்கள் கட்சி பெற்ற ஓட்டுகள் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக, 10 தொகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. 1999ல் நடந்த, லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி, நீலகிரி, திருச்சி மற்றும் கோவை தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றது. குறிப்பாக, கன்னியாகுமரி தொகுதி யில், கட்சி பலமாக உள்ளது. கட்சியின் மாநில தலைவரான, பொன் ராதாகிருஷ்ணன், அங்கு, போட்டியிட்டு, எம்.பி., யாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் இருந்து உள்ளார். அதனால், கன்னியாகுமரியில், பா.ஜ., தனித்துப் போட்டியிட்டாலும், வெற்றி பெறும்.தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், தேனி , தென்சென்னை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளிலும், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணியில் இடம் பெற உள்ள, வைகோ தலைமையிலான, ம.தி.மு.க.,வுக்கும் இந்த தொகுதிகளில் நல்ல செல்வாக்கு உண்டு. அதனால், இவற்றிலும், பா.ஜ., வெற்றி பெற வாய்ப்புள்ளது. சமீபத்திய நாட்களில், மோடிக்கு ஆதரவாக உருவாகியுள்ள அலையும், இதற்கு உதவி செய்யும்.எனவே, பா.ஜ., போட்டியிடும், 10 தொகுதிகள் கிட்டத்தட்ட, உறுதியாகி விட்டன. கூட்டணி பேச்சின் போது, இதில், ஒன்றிரண்டு தொகுதிகள் வேண்டுமானால், கூட்டணி கட்சிகளுக்கு மாறலாம். இல்லையெனில், கண்டறியப்பட்ட, 10 தொகுதிகளிலும், பா.ஜ.,வே போட்டியிடும்.இவ்வாறு, அந்த மாநில நிர்வாகி கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE