லக்னோ : சமீப காலமாக சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கிடையேயான மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. 3வது அணிக்கு யார் தலைமை ஏற்பது என்ற பனிப்போர் தற்போது பகீரங்கமான மோதலாக மாறி வருகிறது. இது சமீபத்தில் விழா ஒன்றில் முலாயம்சிங் பேசியதில் இருந்து வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
சமீபத்தில் சமூக சேவகர் ராஜ் நாராயணின் நினைவு தின விழா, சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. விழாவில் முலாயம் சிங் பேசியதாவது : லாலு பிரசாத், காங்கிரசின் துதி பாடுபவராக செயல்பட்டு வருகிறார்; காங்கிரஸ் தலைமையை காப்பாற்றும் விதமாகவே பீகார் தலைவர்களின் பேச்சுக்களும் உள்ளது; சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு காங்கிரசின் அடிவருடியாக லாலு செயல்பட்டு வருகிறார்; இதன் காரணமாகவே அவர் முஷாபர்நகருக்கு சென்றுள்ளார்; லாலு, காங்கிரசின் தாளத்திற்கு ஏற்றார் போல் ஆடி வருகிறார்; காங்கிரஸ் தலைவர்களை ஈர்ப்பதற்காகவும் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவதற்காகவும் இவ்வாறு அவர் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு முலாயம் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
சமீபத்தில் முஷாபர்நகர் நிவாரண முகாம்களை பார்வையிட்ட லாலு பிரசாத், உ.பி., அரசுக்கு எதிரான கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே முலாயம்சிங் இவ்வாறு பேசி உள்ளார். முஷாபர்நகரில் லாலு பிரசாத் தெரிவித்த பல கருத்துக்களுக்கு முலாயம் இவ்விழாவில் பதிலளித்துள்ளார். முஷாபர்நகரில் பேசிய லாலு, முலாயமை பிரதமராக ஆதரிக்க யார் தயாராக இருக்கிறார்கள்? அவர் கடந்த காலத்தில் மட்டுமின்றி தற்போதும் என்னை எதிர்த்து வருகிறார்; அதனால் இருவரும் காலங்களில் அவர் ஆதரிக்க நான் தயாராக இல்லை என தெரிவித்தார்.
லாலுவின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய முலாயம், முஷாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு எந்த அரசும் செய்ய முடியாத அளவிற்கு நிவாரணங்களை எங்களால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறோம்; எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன; அவர்களுக்கு அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்; அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது; குறுகிய காலத்தில் இது போன்ற நிவாரணப் பணிகளை வேறு எந்த அரசும் செய்திருக்க முடியாது; மக்களும், அரசியல் கட்சிகளும் உ.பி., அரசின் செயல்பாட்டை பாராட்டி உள்ளனர்; ஆனால் எதிர்கட்சிகள் அரசை குறிவைத்து அவதூறுகளை பரப்பி வருகின்றன என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசை தாக்கிய பேசிய முலாயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து வகைகளிலும் தோல்வி அடைந்து விட்டது; சிறுபான்மை இன உறுப்பினர்களும் காங்கிரஸ் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்; மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட கொள்கைகளால் இளைஞர்கள் விரக்தியும், விவசாயிகள் வருத்தமும் அடைந்துள்ளனர்; மூன்றாவது அணி இதற்கு சிறந்த மாற்றாக அமையும் என கருதுவதால் மக்கள் விரக்தியடையாமல் உள்ளனர்; மூன்றாவது அணி மக்களின் நலனுக்காக உழைக்கும்; நாட்டின் முன்னேற்றத்திற்கான கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரும் என முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின் பாதையை பின்பற்றி நடக்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கிய முலாயம், அவர்களின் கொள்கைகள் பலவற்றை எடுத்துக்காட்டி பேசினார். முலாயமின் பேச்சுக்கள், 3வது அணி அமையும் என உறுதிப்பட தெரிவிக்கும் விதமாக அமைந்திருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE