தேர்தல் வந்து விட்டாலே, ஓட்டுக்கு எந்தக் கட்சியினர் அதிக பணம் கொடுப்பர் என்ற எதிர்பார்ப்பு, வாக்காளர்கள் மத்தியில் எழுந்து விடுகிறது. இதனால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, பணத்தை வாரிச்சுருட்டியவர்கள், தேர்தலில், அந்தப் பணத்தை தாராளமாக செலவிடுகின்றனர். இந்தப் பிரச்னையால், பணக்காரர்களே, தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலைமையும் உருவாகியுள்ளது. எனவே, ஓட்டுக்கு துட்டு, சரியா, தவறா? என, இரு பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள்:
தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாண்டுகள் பதவிக்கு வரும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தங்களின் பதவி காலத்தில், எவ்வளவு சம்பாதிக்க முடியும் என, கணக்குப் போட்டு, நாட்டில் நிறைவேற்றப்படும், அனைத்து திட்டங்களிலும் கை வைக்கின்றனர். 'மக்கள் வரிப்பணத்தை திருடுகிறோமே' என்ற மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல், சுருட்டுகின்றனர். ஐந்தாண்டுகளுக்குப் பின், மீண்டும் தேர்தலுக்காக, மக்களை சந்திக்கும் போது, நல்லது எதையும் செய்யாத நிலையில், கொள்ளையடித்த பணத்தில், கொஞ்சத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வர, ஓட்டுப் போட சொல்கின்றனர் அரசியல்வாதிகள். கொள்ளையடித்த பணத்தை, அரசியல்வாதிகளும், கட்சிகளும் கொடுக்கும்போது, வாக்காளர்கள் அதை வாங்கிக் கொள்ளவேண்டும். ஆனால், மீண்டும், அந்த கொள்ளையர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்காமல், களத்தில் உள்ள நல்ல வேட்பாளருக்கு, மக்கள் ஓட்டுப்போட வேண்டும். பணம் கொடுப்பவர்கள், அவர்களது சொந்தப் பணத்தை தருவதில்லை. சுருட்டிய வரிப்பணத்தையே தருகின்றனர். எனவே, ஓட்டுப்போடும் போது, நல்லவர்களுக்கு ஓட்டுபோட வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு, ஓட்டுப்போடவில்லை என்றால், அரசியல்வாதிகள் மிரட்டுவார்கள், அடிப்பார்கள் என, அஞ்ச தேவையில்லை. நேர்மையானவர்களை ஆட்சிக்கு வரும் வரை, கொள்ளையடித்தவர்கள் கொடுக்கும் பணத்தை, வாக்காளர்கள் வாங்கிக் கொண்டு, நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுவதில் எந்தத்தவறும் இல்லை. தேர்தலில் வெற்றி பெற ஓட்டளித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்; இல்லையெனில், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என, கருதி, நல்ல மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றத் துவங்கி விடுவர்.
- டிராபிக் ராமசாமி, சமூக ஆர்வலர்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டு வாங்குவது, மிகத் தவறான நடைமுறை. இதனால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும், ஜனநாயக முறை கேலிக்கூத்தாகி விடும். தேர்தலில் நிற்கும் கட்சிகள், வருங்கால திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரிவித்து, ஓட்டுகளை பெற வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, பணம் கொடுத்து, ஓட்டு வாங்கும் அவல நிலை தொடர்கிறது. இதில், உறுதியான மாற்றங்களை அமல்படுத்த வேண்டும். தேர்தல் செலவை, வேட்பாளரை செய்ய அனுமதிப்பதால் தான், ஓட்டுக்கு காசு கொடுப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது போன்ற அத்துமீறல்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க, வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவுக்காக, தேர்தல் ஆணையம் பணம் தர வேண்டும். இந்த பணத்தைத் தவிர, வேறு பணத்தை செலவு செய்ய வேட்பாளரை அனுமதிக்கக் கூடது. தேர்தலில், வேட்பாளரை செலவு செய்ய அனுமதிப்பதால், பணக்காரர்கள் தான், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், தேர்தல் களத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில், ஒரு தரப்பினரை தேர்தலுக்கு அனுமதிக்க மறுப்பதே, தவறான செயல். வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு பணம் அளிப்பதற்காக, தேசிய தேர்தல் நிதியத்தை உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், தேர்தலுக்காக, கட்சிகளுக்கு பணம் அளிப்பதை, தேசிய தேர்தல் நிதியம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிதியமே, சட்டசபை மற்றும் லோக்சபா வேட்பாளர்களுக்கான, தேர்தல் செலவை நிர்ணயித்து, அதற்குரிய பணத்தை, வேட்பாளர்களுக்கு அளிக்கலாம். இப்படி செய்வதால், தேர்தலில் பணப் புழக்கத்தை தடுக்க முடியும். பணப் புழக்கம் குறையும்போது, ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் நிற்கும்.
- டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தேர்தல் ஆணையர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE