ஜம்மு : காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திரிணாமுல், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறி உள்ள நிலையில் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
தொண்டர்கள் வலியுறுத்தல் :
காஷ்மீரில் 2013ம் ஆண்டின் இறுதி நாளில் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிஷாவர் கலவரம் தொடர்பான 73வது சட்டத்தில் மத்திய அரசு திருத்தத்தை அமல்படுத்தியது குறித்து உமர் அப்துல்லா கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக உமர் அப்துல்லா ஆதராளர்களுக்கும், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தகவல் :
முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கிடையே கடுமையான வார்த்தை பிரயோகங்களும் மோதலும் ஏற்பட்டது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த மோதல் தொடர்பாக மாநில தகவல் துறையின் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் மாலை வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் மாநில தலைவர் தேவேந்தர் சிங் ரானா, இனி காங்கிரசுடன் வைத்துக் கொள்ளும் எந்த வகையான கூட்டணியும் தங்கள் கட்சிக்கு ஆபத்தையே ஏற்படுத்தும் என கட்சியினர் விரும்புவதாக தெரிவித்தார். உமர் அப்துல்லாவிற்கு நெருக்கமான ரானா, குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு தெரிவித்திருந்தார். தேசியவாத காங்கிரசுடன் எவ்வித கூட்டணியும் இனி வைத்துக் கொள்ளக் கூடாத என குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார்.
ரானா பேட்டி :
கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிட வேண்டும் எனவும், ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனிப்பெரம் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தேவேந்திர சிங் ரானா தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களின் இந்த கோரிக்கை தொடர்பான இறுதி முடிவை கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய தேசிய மாநாட்டு கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் ரானா தெரிவித்துள்ளார். தங்கள் கட்சி ஒழுக்கமான நிலையில் இருக்கவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பதில்:
தேசிய மாநாட்டு கட்சியின் கருத்திற்கு பதிலளித்த ஆசாத்தின் ஆதரவாளர்கள், 2014 தேர்தலில் அனைத்து நிலையகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும், எந்த சூழ்நிலையிலும் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைக்காது எனவும் தெரிவித்துள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியின் நிலைப்பாடு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒத்துழைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்றே 2014 லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பெறும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.உமர் அப்துல்லா அரசு மீது மக்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும், அவர்கள் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் ஆட்சியையே விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE