காஷ்மீர் பிரச்னை குறித்து, சர்ச்சையான கருத்தை, ஆம் ஆத்மி கட்சியின், பிரசாந்த் பூஷன் தெரிவித்ததால், டில்லியில் உள்ள, அந்தக்கட்சியின் அலுவலகம் மீது, சில அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதை, தன்னைக் கொல்ல சதி நடக்கிறது எனக்கூறி, மக்களிடம் அனுதாபமும், அதன் மூலம், அரசியல் ஆதாயமும் தேட முற்படுகிறார், அரவிந்த் கெஜ்ரிவால் என, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். அதை மறுக்கிறார், தமிழக ஆம் ஆத்மி பிரமுகர். இது தொடர்பான, இரு தலைவர்களின் வார்த்தை போர்:
காஷ்மீர் தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின், பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்து, நாட்டின் றையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும். காஷ்மீரில், பயங்கரவாதிகளும், நாட்டின் எதிரிகளும், குடிபுகுந்துள்ளனர். அப்படி இருக்கும் போது, பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பிரசாந்த் பூஷன் கூறுவதை, நாட்டின் ஒற்றுமையில், நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காஷ்மீர் உட்பட, நாட்டின் முக்கிய பிரச்னைகள் பற்றி, நேற்று பெய்த மழையில் முளைத்த காளானாக உள்ள, ஆம் ஆத்மி கட்சிக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாம் தெரிந்தது போல, நாட்டின் பிரச்னைகளில், ஆம் ஆத்மி கருத்து தெரிவிப்பது, அமைதியை சீர்குலைக்குமே தவிர, தீர்வை
ஏற்படுத்தாது. ஊழலை ஒழிப்போம் எனக்கூறி துவங்கப்பட்ட, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், திடீரென அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சிக்கு, டில்லியில் ஆட்சி செய்ய, பெரும்பான்மை பலத்தை, மக்கள் அளிக்கவில்லை. ஊழல் குப்பையை அகற்றுவோம் என, புறப்பட்ட அந்த துடைப்பம், குப்பையோடே (காங்.,) கூட்டணி வைத்தது பெரும் அபத்தம். இந்நிலையில், நாட்டுப் பிரச்னையில் எந்த அனுபவமும் இல்லாமல், புரிதலும் இல்லாமல், ஆம் ஆத்மி கட்சி தெரிவிக்கும் கருத்துகள் நாட்டில் மோதலைத் தான் உருவாக்கும். உரிய தீர்வை ஏற்படுத்தாத கருத்துகளை வெளியிட அக்கட்சிக்கு உரிமை இல்லை.
என்னை கொல்ல, இந்து அமைப்பினர் முற்படுகின்றனர். என்னைக் கொன்றால், காஷ்மீர் பிரச்னை தீருமா? என, கேள்வி எழுப்பியுள்ளதன் மூலம், மக்களிடம் அனுதாபம் பெற, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் நாடகம் போடுகிறார். நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், சட்டம் - ஒழுங்கின் மீதும், நம்பிக்கை வைத்துள்ள, இந்து அமைப்புகள் மீதும் பழிபோட்டு, மகிழ்ச்சி காண்கிறார்.
எஸ்.ஆர்.சேகர் தமிழக பா.ஜ., பொருளாளர்
காஷ்மீர் குறித்து, பிரசாந்த் பூஷன் தெரிவித்தது, ஒரு பிரிவினரை காயப்படுத்தியுள்ளது என்ற, கருத்து எழுந்தது. அதனால், அந்தக் கருத்துக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, ஆம் ஆத்மி கட்சிகள் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர். பிரசாந்த் பூஷனும், தன் கருத்தை வாபஸ் பெற்றதோடு, வருத்தமும் தெரிவித்தார். இதை எல்லாம், ஏற்றுக் கொள்ளாமல், டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை தாக்கியுள்ளனர். ஒரு கட்சி அலுவலகம் தாக்கப்படும் போது, அதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமான ஒன்று.
ஆனால், கட்சி அலுவலகத்தை தாக்கியவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி, ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார். பேச்சுவார்த்தை நடத்தும் பொது இடத்தை, தாக்குதல் நடத்தியவர்களே முடிவு செய்யட்டும் என்றும் கூறியுள்ளார். பொதுவாக, ஒரு கருத்துக்கு எதிர்கருத்து வரலாமே தவிர, தாக்கு தலில் ஈடுபடுவது தீர்வை ஏற்படுத்தாது. நாட்டில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எங்கள் கருத்தை நாங்கள் வெளியிடுகிறோம். நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே என்பதற்கு ஏற்ப, நாங்கள் தவறு செய்திருந்தாலும், அந்த தவறை ஒப்புக் கொள்கிறோம். எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவறான கருத்தை வெளியிட்டால், அதை நாங்களே கண்டிக்கிறோம். சாதாரண குடிமகனின் கருத்துக்கும் மதிப்பளித்து தான் நாங்கள் செயல்படுகிறோம். என்னைக் கொன்றால், காஷ்மீர் பிரச்னை தீருமா? தீரும் என்றால், அதற்கும் நான் தயார் என, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது நாடகமல்ல. போலீஸ் பாதுகாப்பே தனக்கு வேண்டாம் என, கூறியவர், இப்படி சொல்கிறார் என்றால், அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இந்து அமைப்பினர், தாக்குதல் நடத்தியதால், இவ்வாறு கூறியுள்ளார்.
லெனின், மாநில குழு உறுப்பினர், தமிழக ஆம் ஆத்மி கட்சி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE