தே.மு.தி.க.,வுக்கு 12 தொகுதியா... ஏழு போதும்! : ஒரு தரப்பில் எதிர்ப்பு; தி.மு.க.,வில் பரபரப்பு| Dinamalar

தே.மு.தி.க.,வுக்கு 12 தொகுதியா... ஏழு போதும்! : ஒரு தரப்பில் எதிர்ப்பு; தி.மு.க.,வில் பரபரப்பு

Added : ஜன 10, 2014 | கருத்துகள் (43)
Share
தே.மு.தி.க.,வுக்கு 12 தொகுதியா... ஏழு போதும்! : ஒரு தரப்பில் எதிர்ப்பு; தி.மு.க.,வில் பரபரப்பு

தி.மு.க., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., முன்வந்தால், அந்த கட்சிக்கு, 12 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதற்கு, தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா, சீட்டும் கொடுத்தால் போதுமானது என, கட்சித் தலைமைக்கு, அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தி.மு.க., தமிழகத்தில், தன் தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்த, தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த அணியில், தற்போது தலித் அமைப்புகளும், முஸ்லிம் லீக் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளதால், கடும் போட்டியை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க., உள்ளது. எனவே, கூட்டணி பலத்தை அதிகரிக்க, தே.மு.தி.க.,வுக்கு வலை விரித்துள்ளது. தி.மு.க., தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, தே.மு.தி.க., தரப்பில், 12 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கேட்டு, பேரம் பேசப்பட்டுள்ளது.
இந்த பேரம் குறித்து, தி.மு.க., தலைமை வட்டாரத்தில், முக்கிய நிர்வாகிகளுடன், கடந்த சில நாட்களாக ஆலோசனை நடந்து வந்தது. அப்போது, தே.மு.தி.க.,வுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுப்பதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு உள்ள ஓட்டு சதவீதத்துக்கு, இது மிகவும் அதிகம் என்றும், ஏழு தொகுதிகளே போதுமானது எனவும், முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தி.மு.க., பொதுக்குழுவில், தே.மு.தி.க.,வுடன் கூட்டு சேர்வதற்கு, வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது; அந்த கட்சியை தேவையில்லாமல், நாம் வளர்த்து விடக் கூடாது என, மாவட்ட செயலர் ஒருவர் பேசிய பேச்சுக்கு, கட்சியினர் பலத்த கரவொலி எழுப்பி, வரவேற்பு தெரிவித்தனர். கட்சியினர் கருத்து, இப்படி இருப்பதை அறிந்த பிறகும், கூட்டணி பலத்துக்காக, தி.மு.க., இறங்கிப் போய், தே.மு.தி.க.,விடம் பேசியது. அதை பலவீனமாக எடுத்துக் கொண்ட, தே.மு.தி.க., பேரம் பேச துவங்கி விட்டது. தி.மு.க., கூட்டணியில் சேர, தேர்தல் செலவு உட்பட, பல நிபந்தனைகளை விதிக்கத் துவங்கி விட்டது. அவர்களுக்கு, 12 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட் என்பது ரொம்ப அதிகம். அந்த கட்சிக்கு, 29 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர்.
அதிலும் ஏழு பேர், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக போய் விட்டனர். 12 லோக்சபா தொகுதிகள் என்றால், 72 சட்டசபை தொகுதிகள் என, அர்த்தம். அது போக, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் என்றால், என்ன கணக்கு?
இந்த தேர்தலில், 72 சட்டசபை தொகுதிகள் அடங்கிய, 12 லோக்சபா சீட் கொடுத்தால், சட்டசபை தேர்தலில், அந்த கட்சி, 100 சீட் கேட்கும் அளவுக்கு போய் விடும். தேவையில்லாமல், நாமளே அக்கட்சியை வளர்த்து விடுவதாகி விடும்.எனவே, அந்த கட்சிக்கு, ஏழு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கினால் போதும். அதோடு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி பெறுவதற்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்ற உறுதி அளித்தால் போதுமானது. இதற்கு மேல், அக்கட்சி எதிர்பார்க்கும் வேற விஷயங்களை செய்து தரலாம் என,
நிர்வாகிகள் கருதுகின்றனர்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X