கட்சி பொதுக்குழுவைக் கூட்டி, காங்கிரசுடன் இருந்த ஒன்பது ஆண்டு கால உறவை, வெட்டிக் கொண்டதாக அறிவித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீரென்று, சோனியாவின் தூதர், குலாம் நபி ஆசாத்தை, சந்திக்க என்ன காரணம்? இந்த கேள்விக்கு பின்னணியில், கனிமொழி இருப்பதும், அவருக்காக, கட்சி எடுத்த முடிவை மீறி, ஆசாத்தை கருணாநிதி சந்திக்க முன்வந்ததும், ஸ்டாலினை கடும் கோபம் அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விவாதிக்கவில்லை:அந்த கோபம் காரண மாகவே, ஆசாத் வருவது தெரிந்தும், அவர், சி.ஐ.டி., காலனிக்கு செல்ல மறுத்து விட்டார் என்றும், தன் வீட்டிலேயே இருந்து விட்டார் என்றும், தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.ஆனால், அந்த கோபத்தை யும், அதிருப்தியையும், கருணா நிதியிடம், நேற்று அவர் கொட்டித் தீர்த்து விட்டதாக தெரிகிறது. அதனால், 'அப்செட்' ஆன கருணாநிதி, அறிவாலயம் வந்தபோதிலும், யாருடனும், இந்த சந்திப்பு பற்றி விவாதிக்கவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய உறவை புதுப்பிக்க...:இது பற்றி, தி.மு.க.,வினர் கூறியதாவது: 'காங்கிரஸ் உறவு வேண்டாம்' என, முடிவு எடுக்கவே, பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் பேசிய அனைவருமே, 'காங்கிரசுடன் இனி கூட்டணி அமைக்கக் கூடாது' என, வலியுறுத்தினர். அதனால், ஏகமனதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க., வெளியேறியது.அதன்பின், பொதுக்குழு தீர்மான விளக்க, பொதுக்கூட்டங்களை, ஊர் ஊராக நடத்தி, காங்கிரசை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசியாகி விட்டது. அதனால், கட்சியினர் எல்லாரும், தி.மு.க., தலைமையில் அமைய உள்ள புதிய கூட்டணியை வரவேற்க தயாராகி விட்டனர். குறிப்பாக, தே.மு.தி.க.,வை சேர்க்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நேரத்தில், பழைய உறவை புதுப்பிக்கும் நடவடிக்கையாக, ஆசாத் வருகையும், அவரை சந்திக்க கருணாநிதி முடிவு செய்ததையும், தி.மு.க.,வினர் ஏற்கவில்லை. ஆசாத்தை சந்திக்க, கருணாநிதி மறுத்திருக்க வேண்டும்; அப்படி செய்திருந்தால், காங்கிரசுக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும்.அதை அவர் செய்யாமல் போனதற்கு, கனிமொழியே காரணம். '2ஜி' போன்ற அவரது, தனிப்பட்ட நலனுக்காக, மிகவும் ரகசியமாக இந்த சந்திப்புக்கு, அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
உடன்பாடு இல்லை:கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், நேற்று முன்தினம் இரவு, திடீரென்று சென்னை வந்தார். நேற்று தான் வேலூரில் அவருக்கு நிகழ்ச்சி. ஆனால், அவர் நேற்று முன்தினம் இரவே வந்து, சென்னையில் தங்கியதற்கு காரணம், கருணாநிதியை சந்திப்பதற்கு தான். ஆசாத்துடன் பேசி, அவரையும் கருணாநிதியையும் சந்திக்க, கனிமொழி தான் ஏற்பாடு செய்துள்ளார். கனிமொழி செய்த, 'லாபியிங்' காரணமாகவே, இந்த சந்திப்பு நடந்துள்ளது.அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதால், அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால், மீண்டும் காங்கிரசுடன் கூட்டு சேரும் விஷயத்தில், ஸ்டாலினுக்கு உடன்பாடு கிடையாது. மூத்த நிர்வாகிகளும், முன்னணி தலைவர்களும் கூட அதை விரும்பவில்லை.இவ்வாறு, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
காங்கிரசிலும் சர்ச்சை:இதற்கிடையில், ஆசாத் வருகையும், கருணாநிதியுடனான சந்திப்பும், காங்கிரஸ் கட்சியிலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆசாத் சென்னை வரும் தகவலும், கருணாநிதியை சந்திக்கும் திட்டமும், தங்கபாலுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகனுக்கு, சந்திப்பு திட்டம் தெரிவிக்கப்படவில்லை. ஆசாத் சென்னை வருகிறார் என்றும், வேலூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றும், ஆசாத் உதவியாளர் மூலம், தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை.ஆனால், இரவோடு இரவாக போய், கருணாநிதியை சந்திப்பது பற்றி எதுவும் அவருக்கு சொல்லப்படவில்லை. அதனால், அவரை வரவேற்க, ஞானதேசிகன் செல்ல வில்லை. நேற்று காலை, ஞானதேசிகனுடன் போனில் ஆசாத் பேசியபோது, கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு பற்றி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE