அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ரெடி : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு - Jayalalitha | ADMK candidate list ready | Dinamalar

அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 'ரெடி' : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு

Updated : ஜன 12, 2014 | Added : ஜன 11, 2014 | கருத்துகள் (48)
Share
அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 'ரெடி' : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு

லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், கிட்டத்தட்ட தயாராகி விட்டது. கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர், சென்னை திரும்பியதும், பட்டியல் வெளியிடப்படுகிறது.

லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடம்இருந்து, அந்தக் கட்சி தலைமை, விருப்ப மனுக்களை வாங்கியது.


தலா மூன்று பேர்:

கட்சி நிர்வாகிகளும், போட்டி போட்டு மனு அளித்தனர். இது தவிர, மாவட்டச் செயலர்களிடமிருந்து, தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள, தலா மூன்று பேரின் பெயர்கள், தொகுதி வாரியாக கேட்டு பெறப்பட்டன.பின், விருப்ப மனு கொடுத்தவர்கள், மாவட்டச் செயலர்கள் பரிந்துரைத்த நபர்களின் பின்னணி பற்றி அலசப்பட்டது. உளவுத்துறை மூலமும், அவர்களைப் பற்றிய தகவல் திரட்டப்பட்டது. உளவுத் துறையினர் கொடுத்த தகவல் பற்றி, இரண்டு நாட்களுக்கு முன், அமைச்சர்கள், பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் அடங்கிய நால்வர் அணியினர், மாவட்டச் செயலர்களை அழைத்து பேசினர். அதன் பின், முதல்வர் உத்தரவுப்படி, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஆலோசனை:

இது பற்றி, நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் அறையில், நால்வர் அணியினர், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களை அழைத்து ஆலோசித்தனர். அதனால், அமைச்சர் பன்னீர்செல்வம் அறை, பரபரப்பாக காணப்பட்டது. ஒவ்வொரு தொகுதி வாரியாக, அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் அழைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது.அவர்கள் தெரிவித்த விவரம், முதல்வரிடம் தெரிவிக்கப்பட உள்ளது. முதல்வர் கொடநாட்டிலிருந்து திரும்பியதும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கண்டிப்பான உத்தரவு:

தற்போதைய நிலையில், 40 லோக்சபா தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் தயாராகியுள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிட, 3,000த்துக்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்துஉள்ளனர். அப்படி கொடுத்து உள்ளவர்களில் பலர், தங்களது பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளதா என, அறிய, நால்வர் அணி நடத்திய, ஆலோசனைக்கு சென்று வந்த, மாவட்டச் செயலர்கள் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர்.ஆனால், வேட்பாளர்கள் பெயரை, எந்த சூழ்நிலையிலும், ஜெயலலிதா வெளியிடும் முன், தெரிவிக்கக் கூடாது என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், யாரும் வாயை திறக்க மறுத்து வருகின்றனர். இ

இதற்கிடையில், அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான, நால்வர் அணியினர், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் சென்னை திரும்பியதும், அந்த கட்சிகளுக்கான, 'சீட்'கள் எவ்வளவு என்பது உறுதி செய்யப்படலாம் என, நம்பப்படுகிறது.


பிற மாநிலங்களிலும்...:

இந்நிலையில், லோக்சபா தேர்தல் வர உள்ளதாலும், முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வேட்பாளராக, அ.தி.மு.க., முன்னிறுத்த உள்ளதாலும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும், கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.வரும், 18 முதல், 20ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடில்லி, அந்தமான் உட்பட, பிற மாநிலங்களிலும் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று சிறப்புரைஆற்றுகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X