கருணாநிதி - ஆசாத் பேசியது என்ன? கட்சி வட்டாரங்கள் பரபரப்பு தகவல்| What azad and Karunanidhi spoke? | Dinamalar

கருணாநிதி - ஆசாத் பேசியது என்ன? கட்சி வட்டாரங்கள் பரபரப்பு தகவல்

Updated : ஜன 12, 2014 | Added : ஜன 11, 2014 | கருத்துகள் (77)
Share
தி.மு.க., தலைவர், கருணாநிதியை, காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான, குலாம்நபி ஆசாத், நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள, இந்தச் சந்திப்பு குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதியிடம் ஆசாத்தெரிவித்தது:*ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., தொடர வேண்டும். மாநில கட்சிகளுடன்,
 கருணாநிதி - ஆசாத் பேசியது என்ன? கட்சி வட்டாரங்கள் பரபரப்பு தகவல்

தி.மு.க., தலைவர், கருணாநிதியை, காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான, குலாம்நபி ஆசாத், நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள, இந்தச் சந்திப்பு குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:
கருணாநிதியிடம் ஆசாத்தெரிவித்தது:

*ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., தொடர வேண்டும். மாநில கட்சிகளுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது.
*தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, சோனியா விரும்புகிறார். உங்களின் ஆலோசனையுடன் மீண்டும், ஐ.மு., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
*தொகுதிகள் ஒதுக்கீட்டில், எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். உங்களுடன்
கூட்டணி அமைக்கவே விரும்புகிறோம்.
*தமிழக காங்கிரஸ் தலைவர்கள், உங்களிடம் பாராமுகமாக இருந்தாலும், மேலிடத் தலைவர்கள் உங்களை பெரிதும் மதிக்கின்றனர்; ராஜ்யசபா தேர்தலில் உங்களுக்கு ஆதரவு அளித்தோம்.
*மத்திய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியிலிருந்தும், நாங்கள் உங்களை வெளியேற்றவில்லை. நீங்களாகத் தான் வெளியேறினீர்கள். தி.மு.க., கூட்டணி யில், தே.மு.தி.க.,வும் இடம் பெற்றால், மதச்சார்பற்ற அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

இதற்கு, கருணாநிதி அளித்த பதில்:
*சட்டசபை தேர்தலுக்கு பின், அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., -காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.
*ராஜ்யசபா தேர்தலில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எடுத்த நடவடிக்கைகள், கசப்பானஅனுபவங்களை தந்தன.
*ஏற்காடு இடைத்தேர்தலில், ஆதரவு கேட்டோம்; நீங்கள் பதிலே சொல்லவில்லை.
*கூட்டணியை நான் மட்டும் உறுதி செய்ய முடியாது. கட்சியில் ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும்.
*டில்லி தலைவர்கள், என்னிடம் அன்பும், மரியாதையும் காட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள், எதார்த்தத்தை உணராமல் நடந்து கொள்கின்றனர்.
*'நாங்கள் காங்கிரசோடு கூட்டணி இல்லை' என, அறிவித்ததும்,சத்திய மூர்த்தி பவனில் காங்கிரசார் சிலர், பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். இதை, எப்படி நாகரிகமான விஷயமாக எடுத்துக் கொள்வது.
*நீங்களும் தான் காங்கிரசில் முக்கிய, மூத்த தலைவராக இருக்கிறீர்கள். தமிழகத்துக்கு வரும்போது ஒவ்வொரு முறையும், கூட்டணிக் கட்சித் தலைவர் மற்றும் மூத்த தலைவர் என்கிற முறையில், மரியாதை நிமித்தமாக என்னை சந்திக்கிறீர்கள். அந்த சாதாரண நடைமுறை கூட, கட்சியின் எதிர்கால தலைவராகவும், பிரதமராகவும் முன்னிலைப்படுத்தப்படும் ராகுலுக்கு தெரியவில்லை. அவர் என்னை சந்திப்பதே இல்லை.
*தமிழக காங்கிரசில் ஆயிரம்கோஷ்டிகள் இருக்கிறது என்பதற்காக, ஆளாளுக்கு ஒன்றைச் சொல்கின்றனர். அது தான், காங்கிரஸ் - தி.மு.க., உறவுக்கு, இடைஞ்சலாக அமைந்தது என்பதை, காங்கிரஸ் தலைவர்கள் உணர மறுக்கின்றனர்.
*ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையில், பார்லிமென்ட் கூட்டுக் குழு தலைவர், பி.சி.சாக்கோ நடந்து கொண்ட விதம், தி.மு.க.,வுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தும், காங்கிரஸ் மேலிடம், அதை கண்டுகொள்ளவில்லை. கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் தர, ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை; அது ஏன்?
இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X