அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு| Tit for tat expulsions: India orders US diplomat to leave country | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு

Updated : ஜன 11, 2014 | Added : ஜன 11, 2014 | கருத்துகள் (101)
Share
அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த மாதம், 12ம் தேதி, தேவயானி, அமெரிக்க போலீசாரால், கைவிலங்கிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்படுவதற்கு முன், ஆடைகளைக் களைந்து சோதனை இடப்பட்டார்; 1.5 கோடி ரூபாய் ரொக்க ஜாமினில், அவர் விடுவிக்கப்பட்டார்.

தேவயானியை, இவ்வழக்கில் இருந்து காப்பாற்ற, இந்தியா பல வழிகளிலும் முயற்சி செய்தது. அமெரிக்க சட்டப்படி, கைது செய்யப்பட்ட ஒருவர் மீது, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, வரும், 13ம் தேதி, தேவயானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற நடவடிக்கையைத் துவக்க, அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

கோரிக்கை:இந்நிலையில், தேவயானியை, ஐ.நா., குழுவின் நிரந்தர உறுப்பினராக நியமித்து, அவரது பாதுகாப்பை இந்தியா அதிகரித்தது. அவரை வழக்கில் இருந்து விடுவிக்கவும், இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது.ஆனால், தேவயானி கைது செய்யப்பட்ட போது, அவர், ஐ.நா., குழு உறுப்பினர் பதவியில் இல்லை என்பதால், அவரை விடுவிக்க முடியாது என, அமெரிக்கா மறுத்தது. தேவயானி மீது, விசா மோசடி மட்டுமின்றி, நியூயார்க் கோர்ட்டில், வழக்கறிஞர், ப்ரீத் பராராவிடம் பொய் வாக்குமூலம் அளித்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேவயானி மீதான, இரண்டு குற்றச்சாட்டுகளும் சேர்த்து, அவருக்கு, அதிகபட்சமாக, 15 ஆண்டுகள் வரை, சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளை துவக்கி உள்ள அமெரிக்கா, தேவயானியின் தூதர் அந்தஸ்து பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு, இந்தியாவிடம் கேட்டது. இதற்கு இந்தியா மறுத்ததை தொடர்ந்து, 'தேவயானி, அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும்' என, அமெரிக்க நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன் படி, நேற்று, தேவயானி, நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு, நள்ளிரவில் இந்தியா வந்து சேர்ந்தார்.

கோர்ட்டில் ஆஜர்:'நாட்டை விட்டு வெளியேறினாலும், தேவயானி மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட மாட்டாது. உரிய நேரத்தில் தேவயானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும்; அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பும் போது, அவருக்கு எவ்வித அந்தஸ்தும் கொடுக்கப்பட மாட்டாது' என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தேவயானி குறிப்பிடுகையில், ''என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை; இவை அடிப்படையில்லாதது,'' என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், தேவயானி போல், துணை தூதர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளது.இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவில் தங்கியுள்ள, தேவயானி வீட்டு பணிப்பெண், சங்கீதா, தேவயானி வீட்டில் பணிபுரிந்த போது, பல கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறி, பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X