ஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன?- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்| Uratha sindhanai | Dinamalar

ஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன?- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்

Added : ஜன 11, 2014 | கருத்துகள் (8) | |
வரும் மே மாதத்திற்குள் லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. 2014 ஜன., 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தி அடைந்த, அனைத்து நபர்களுக்கும் ஓட்டுரிமை வழங்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டம், மக்களுக்கு பாடம் நடத்துவது தான்.நான், கடந்த, 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணிக்காலத்தில், நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு அரசு அலுவலர் என்ற
 ஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன?- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்

வரும் மே மாதத்திற்குள் லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. 2014 ஜன., 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தி அடைந்த, அனைத்து நபர்களுக்கும் ஓட்டுரிமை வழங்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டம், மக்களுக்கு பாடம் நடத்துவது தான்.

நான், கடந்த, 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணிக்காலத்தில், நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு அரசு அலுவலர் என்ற அளவில், பல பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.
ஓட்டு பெட்டிகளை கிட்டங்கியிலிருந்து எடுத்து வருவது முதல், துடைத்து சுந்தம் செய்து தயார் செய்வது, ஓட்டுச் சீட்டுகளை அச்சடிப்பது முதல், தேர்தல் பணிகளின் கடைசி கட்ட பணியான பெட்டிகளை, 'சீல்' வைத்து கருவூலத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பில் ஒப்படைப்பது வரை, பலவகை பணிகளை செய்திருக்கிறேன்.ஆனால், ஒவ்வொரு சமயமும், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே... அப்படி செய்தால் சரியாக இருக்குமே என்றெல்லாம் சிந்தித்தது உண்டு. 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பர். அதுதான் நடந்தது. ஒவ்வொரு அதிகாரியும், தன் மனம் போன போக்கில் உத்தரவிடுவர்; ஆனால், பெயர் மட்டும், இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தின் ஒரே உத்தரவு நடைமுறைப்படுத்துவதாக பேச்சு. இதற்காக, மாநிலத் தேர்தல் அதிகாரி, முதலில் வகுப்பு நடத்துவார். அதை அறிந்து வந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்), தன் கீழ் உள்ள அலுவலர்களுக்கு பாடம் நடத்துவார். கடைசியாக, களப்பணி அலுவலர்களுக்கு பாடத்தை ஊட்டி விடுவார். ஆனால் நடப்பது என்னவோ, பல இடங்களில் குழப்பம் தான்.

இன்றைய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறைகளில், பல குறைபாடுகள் இருப்பது நாடறிந்த உண்மை. தேர்தல் ஆணையத்திடம் எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும், உடனே, 'அது நடைமுறை சாத்தியம் இல்லை' என்று ஆரம்பிப்பர். உதாரணமாக, மின்னணு வாக்குப் பெட்டி வரும் போது, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் பலப்பல குழப்பங்கள், சந்தேகங்களை எழுப்பினர். உண்மையில் வாக்காளர்கள், தெளிவாகவும் புத்திசாலியாகவும் தான் இருக்கின்றனர்.இதற்கு ஒரு முக்கிய உதாரணம் சொல்லலாம். 2001ம் ஆண்டு நடைபெற்ற தமிழக, சட்டசபை தேர்தலில் தான், முதல் முதலாக அனைத்து தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் காட்டப்பட்டது. வித்தை காட்டும் இடத்தில் மக்கள் கூடுவது போன்று, சிறிது கூட்டம் கூடியது. சிலர் தாமே ஓட்டுப்பதிவு செய்து, விளங்கிக் கொண்டனர். ஆனால், தேர்தல் நாளன்று புதிய இயந்திரத்தில் மிகச் சரியாக, எந்த ஒரு சிறு குழப்பமோ, சந்தேகமோ இன்றி, தாம் விரும்பும் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தி, தங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஓட்டுச்சாவடிக்கு சென்ற அலுவலர்கள் முதல், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அலுவலர்கள் வரையிலும், பலருக்கு குழப்பமும், சொதப்பலும் ஏற்பட்டது. இன்று வரையிலும், முற்றிலும் தெளியாதவர்கள் இருக்கின்றனர்.

தேர்தல் முடிந்த பின், தோற்றவர் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தப்பு செய்ததாகவோ அல்லது அதில் தில்லு முல்லு செய்யப்பட்டதாகவோ அறிக்கை விடுவதற்கு, வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பட்டது. இதுவே வெற்றி பெற்றுவிட்டால், வாய் திறக்கமாட்டார்கள்.ஓட்டுப்பதிவு யாருக்கு செய்தோம் என்பது, மக்களுக்குத் தெரியவில்லையாம். நீதி மன்றம் தலையிட்டு உத்தரவிட, இப்போது ஒரு பிரிண்டரை இணைத்து, அவர்கள் ஓட்டளித்ததும் ஒரு சீட்டு வெளிவருமாம் அதில் அவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பது, தெளிவாக அச்சாகியிருக்கும். அது வாக்காளரிடம் வழங்கப்படும்.மின்னணு வாக்குப்பதிவு செய்யப்பட்டதும், வழங்கப்படும் சீட்டுக்களை எண்ண வேண்டும் என்று, மீண்டும் அரசியல்வாதிகள் கோரிக்கை வைக்க மாட்டார்களா?சந்தேகம் உள்ளவர்களுக்கு விளக்கம் சொல்லி தீர்த்து வைக்கலாம். ஆனால், சந்தேகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு, எப்படி தெளிவைத் தருவது?

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, எந்த ஒரு வாக்களராவது, போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரைக்கூட தாம் தேர்ந்தெடுக்க விரும்பாத பட்சத்தில், கடைசியாக ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று, ரகசியமாக தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டு, கடைசி பொத்தானுக்கு வாக்காளர்கள் அதிக ஓட்டளித்து விட்டால், அப்போது மறு தேர்தல் நடத்தப்பட மாட்டாது. போட்டியிட்ட வேட்பாளர்களில் யார் அதிக எண்ணிக்கையில் ஓட்டு பெற்றுள்ளாரோ (அதாவது நிராகரித்ததாக குறிப்பிட்டு ஓட்டளிக்கப்பட்டதைவிட குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளரில் யார் அதிகம் ஓட்டு பெற்றாரோ) அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இது எப்படி இருக்கு. தேர்தல் ஆணையம், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற போக்கில்தான் நடக்குமா என்பது விளங்கவில்லை.இப்படிப்பட்ட முடிவெடுக்கும்போது, 'நோட்டா' பொத்தான்தான் எதற்கு?வேட்பாளர் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டு, அனைத்து ஓட்டுகளும் கடைசி பொத்தானுக்கு விழுந்து விட்டால், என்ன செய்வர்? வேட்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வதா?

இந்தியாவில் தேர்தல் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே குறையை வைத்து, நடைமுறையில், நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று நடைமுறையை சிக்கலாக்குவதில், தேர்தல் ஆணையம், தன் நேரத்தையும், திறனையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.தொலைதூர நிலங்களிலிருந்து, தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அலுவலர்களையும், இன்னும் ஓட்டுச்சாவடி அளவு வரை மைக்ரோ பார்வையாளர்களையும் நியமித்து, தேர்தல் நடத்தி விட்டால் போதுமா? அவர்கள் அடிக்கிற லூட்டியும், கூத்தும் சொல்லில் அடங்காது என்பது தனிக்கதை.குற்றம் செய்தவர்களையும், தண்டனை பெற்றவர்களையும் அரசியலில் இருந்து களையெடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் எழுந்தது தான், சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பு. அதன் அடிப்படையில், இருவர் பதவி இழப்பையும் சந்தித்து விட்டனர்.

ஆனால், அதற்குள் அப்படி யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஆளும் கட்சி ஒரு சட்டத்திருத்தத்தை உத்தேசித்து, அதிலும் சில நாடகம் ஆடி, கடைசியில், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் இறையாண்மை கேவலப்படுத்தப்பட்டது போன்ற நிகழ்வுகள் அரங்கேறியது தான் மிச்சம்.மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, சரியில்லாதவர் என்றால், அவரை திரும்ப அழைக்கும் நடைமுறையும் கிடையாது.
●முதலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, கும்மாளம் அடிக்கும் தேர்தல் திருவிழா திட்டத்தையே மாற்ற வேண்டும். இப்படி செய்வதால், ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு ஆட்சியை பிடிப்பது, பதவிக் காலத்தை மன்னராட்சியாக நடத்துவது போன்றவை தடுக்கப்படும்.மொத்த சட்டசபை தொகுதிகளை, ஐந்தாகப் பிரித்து விட வேண்டும், ஒவ்வொரு ஆண்டும், ஐந்தில் ஒரு பங்கு இடங்களுக்கு தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். முதல் ஆண்டில், குறிப்பிட்ட ஐம்பது தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள், ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பர். ஆறாவது ஆண்டு, அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும். அடுத்த ஐந்தில் ஒரு தொகுதி வாக்காளர்கள் மட்டும், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிலிருந்து ஐந்து ஆண்டு பதவி வகிப்பர். ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஐந்தில் ஒரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். இப்படி நடைமுறை வந்துவிட்டால், கட்சி மாறி, மக்கள் முகத்தில் கரி பூசுவது, ஓட்டளித்து தேர்வு செய்த மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிகார போதையில் எப்படியும் செய்யலாம் என்ற எண்ணம் கொள்வது ஆகியவை தடுக்கப்படும்.
●இந்த நடைமுறையால், ஆட்சியாளர்கள் தாங்கள் மனம் போன போக்கில் திட்டம் போடுவதும், பொது மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை போட்டு, அரசு கஜானாவை காலி செய்வதும் தடுக்கப்படும். ஆட்சியாளர்கள், தங்கள் செயல்பாடுகள் மக்களிடம் எந்த அளவிற்கு செல்லுபடியாகிறது என்று, தங்களுக்கு தாங்களே மார்க் போட்டு, சுய மதிப்பீடு செய்து கொள்வர். அதற்கு தக்கபடி தங்கள் செயல்பாடுகளை செம்மைப்படுத்திக் கொள்வர்.
●அதிக இடங்களை பிடித்து, ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர், தம் செயல்பாடுகள் சரியில்லையெனில் அடுத்த ஆண்டு நடைபெறக் கூடிய அந்தாண்டுக்கான பகுதிகளின் தேர்தல் மூலம் தங்கள் கட்சி பிரதிநிதிகளின் பலம் குறைந்து ஆட்சி பறிபோய் விடும் என்பதால் எதிலும் அடக்கி வாசிப்பர். உண்மையான மக்கள் சேவைக்கு தங்களை திருப்பிக் கொள்வர். தேர்தல் கமிஷன் சிந்திக்குமா?
இமெயில்: pasupathilingam@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X