'நாங்கள் என்ன தவறு செய்தோம்; எங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், நீதி கேட்க, பொங்கலுக்கு முதல் நாளான நாளை, மதுரையில் இருந்து புறப்படுகின்றனர், அழகிரி ஆதரவாளர்கள். பொங்கலன்று, கருணாநிதியை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளனர்.
சர்ச்சை போஸ்டர்கள்:
மதுரையில், தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட, சர்ச்சைக்குரிய போஸ்டர் களால், அதிருப்தி அடைந்த, தி.மு.க., தலைமை, மதுரை மாநகர தி.மு.க.,வை, கூண்டோடு கலைத்தது. மதுரை மாநகரில், 72 வார்டுகள் உள்ளன. ஒரு வார்டுக்கு, 11 நிர்வாகி கள் வீதம், 792 பேரும், ஒரு பகுதிக்கு, 11 நிர்வாகிகள் வீதம், மொத்தமுள்ள, ஒன்பது பகுதிகளுக்கு, 99 பேரும் உள்ளனர். இதுதவிர, மாவட்ட நிர்வாகிகள், நான்கு பேர் உட்பட, 900 பேரின், பதவிகளை, தி.மு.க., மேலிடம் சமீபத்தில் பறித்துள்ளது. இவர்கள் அனைவரும், தன் ஆதரவாளர்கள் என்பதால், 'தலைமையின் நடவடிக்கை கருவை கலைத்தது போன்றது' என, அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து, அழகிரி யின் மகள், அஞ்சுக செல்வி சென்னை வந்துள்ளார். அதனால், அழகிரி, தன் குடும்பத்தினருடன் சென்னையில் தங்கியுள்ளார். அனேகமாக, இன்று மதுரை சென்று, தன் ஆதரவாளர்களைச் சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திக்க திட்டம்:
இதற்கிடையில், மதுரையில், பதவி பறிக்கப்பட்ட, அழகிரி ஆதரவாளர்கள், 900 பேரும், 'நாங்கள் என்ன தவறு செய்தோம்; எங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்' என, தி.மு.க., தலைவர், கருணாநிதி யிடம், பொங்கலன்று நீதி கேட்க முடிவு செய்துள்ளனர். இதற்காக, பொங்கலுக்கு முதல் நாளான நாளை, அவர்கள் மதுரையிலிருந்து, சென்னைக்கு புறப்பட தீர்மானித்து உள்ளனர். அனேகமாக, 20க்கும் மேற்பட்ட பஸ்களில், அவர்கள் சென்னை வந்து, பொங்கல் தினத்தன்று, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில், அவரை சந்திக்கலாம் அல்லது அறிவாலயத்தில் சந்திக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் அன்று, தொண்டர்களை தி.மு.க., தலைவர் கருணாநிதி சந்திப்பது வழக்கம். எனவே, அன்றைய தினம், அவரை சந்தித்து, நீதி கேட்க அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இரண்டாக உடையும்:
முன்னதாக, அழகிரி மதுரை வந்ததும், அவரிடம், இதுபற்றி விவாதிக்க உள்ளனர். அவர் அனுமதி கொடுத்துவிட்டால், சென்னைக்கு, பஸ்களில் புறப்பட்டு விடுவர். இதுதொடர்பாக, அழகிரி ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: எங்களின் பதவிகளைபறித்ததற்கு, 'கரு கலைப்புக்கு சமம்' என, அழகிரி கண்டித்தார். இதைவிட பெரிய வார்த்தையை சொல்லி விட முடியாது. கட்சியிலிருந்து அழகிரியை நீக்கினால், தென் மண்டல தி.மு.க., இரண்டாக உடையும். அது கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். நாங்கள் சென்று, கருணாநிதியிடம் நீதி கேட்போம். அவர் எங்களை பார்த்து விட்டால் போதும், கண்டிப்பாக சமரசமாகி விடும். இல்லையென்றால், கட்சி தேர்தலை சந்திப்போம். தேர்தல் மூலம் பதவிகளை கைப்பற்றுவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE