டில்லியில், ஆட்சியை கைப்பற்றியதால், தேசிய அளவில் பிரபலமாகியுள்ள, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு, தமிழகத்தில் நேரம் சரியில்லை. 'இக்கட்சி பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களிடம், கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது; குறிப்பிட்ட மதத்தினர், கட்சியை கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றனர்; கட்சி பதவிகளில், உறவினர்களை நியமித்து வருகின்றனர்' என, அடுத்தடுத்து, பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
'சஸ்பெண்ட்':
தமிழகத்தில், ஆம் ஆத்மி துவங்கப்பட்ட நாளில் இருந்தே, அக்கட்சியில், கோஷ்டிப்பூசல் துவங்கியுள்ளது. தற்போது, அது, உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஆம் ஆத்மியின், தமிழக பிரிவிலிருந்து, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், நசீரின், அருள் மற்றும் மாரி செல்வம் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டதாக, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான, கிறிஸ்டினா சாமி அறிவித்தார். ஆனால், சஸ் பெண்ட் செய்யப்பட்ட, ஆறு பேரும், 'நாங்களே, உண்மையான ஆம் ஆத்மி' என, கூறி வருகின்றனர்.
அத்துடன், கிறிஸ்டினா சாமி குறித்து, சென்னை, அமைந்தகரையில் உள்ள, ஆம் ஆத்மி அலுவலகத்தில், நாராயணன், கிருஷ்ணமூர்த்தி, நசீரின், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கூறியதாவது: கிறிஸ்டினா சாமி, கரூர் மாவட்டத்தில் செயல்படும், ஏ.ஆர்.ஈ.டி.எஸ்., மற்றும், சுவாதி அறக்கட்டளைகளின் இயக்குனர். அந்த மாவட்டத்தில், இந்த அறக்கட்டளைகளுக்கு, 200 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி பதவியை பயன்படுத்தி, தன் அறக்கட்டளைகளுக்கு, வெளி நாடுகளில் இருந்து, கிறிஸ்டினா சாமி, நிதியுதவி பெற்றுள்ளார். கடந்த, ஆறு மாதத்தில், 1 கோடி ரூபாய் பெற்றுள்ளார். தன்னைப் பற்றிய, உண்மைகளை மறைத்து, கட்சி பதவியில் கிறிஸ்டினா நீடிக்கிறார். இவரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களும் தவறானவர்கள். இதுகுறித்து, கேள்வி கேட்ட எங்களை, கட்சியில் இருந்து நீக்கி விட்டனர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எங்களை நீக்க, கிறிஸ்டினா சாமிக்கு அதிகாரம் இல்லை. அவர் மீதான, குற்றச்சாட்டுகள் குறித்து, கட்சியின் மத்திய தலைமையிடத்தில் புகார் அளித்துள்ளோம். தமிழகத்தில், ஆறு மாதத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆராய, டில்லியில் இருந்து, இருநபர் குழு சென்னை வர உள்ளது. அந்தக் குழு, கிறிஸ்டினா சாமி மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம். இது மட்டுமின்றி, மத்திய அரசு, இதில் தலையிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிறிஸ்டினா சாமியின் அறக்கட்டளை சொத்துகளை, பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களை, ஆம் ஆத்மி கட்சியில், திட்டமிட்டு சேர்த்து வருகிறார், கிறிஸ்டினா சாமி. தற்போது, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ரோஸ்லின் ஜீவா, சாம் ஆகியோர், அவரின் உறவினர்கள். தமிழகத்தின், பல பகுதிகளிலும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களே, கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
கிறிஸ்டினா மறுப்பு:
குற்றச்சாட்டுகள் குறித்து, கிறிஸ்டினா சாமி கூறியதாவது: தமிழகத்தில், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், கட்சி வளர்ச்சியை தடை செய்ய, திட்டமிட்டு செயல்படுகின்றனர்.என் மீதான குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய்; அபாண்டமான குற்றச்சாட்டு. மாவட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்களில் ஓரிருவர், குறிப்பிட்ட மதம் சார்ந்தவராக இருந்திருக்கலாம். ஆனால், அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்கள், ஒரே அமைப்பினர் அல்ல. பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவர்கள் மீது, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE