லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள, தே.முதி.க., தலைவர் விஜயகாந்த், தை பிறந்த பின், அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையை துவக்க, முடிவு செய்துள்ளார்.
அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு மாற்று எனக் கூறி, தே.மு.தி.க.,வை துவக்கிய விஜயகாந்த், இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்தார். அவற்றில், பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை. அதனால், 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 40 இடங்களில் போட்டியிட்டு, 28 இடங்களை கைப்பற்றினார். அதன்பின், ஜெயலலிதாவுக்கும், அவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியில்இருந்து வெளியேறினார்.இதனால், கோபமடைந்த அ.தி.மு.க., விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரை, தங்கள் ஆதரவாளர்களாக மாற்றியது. ஆத்திரமடைந்த விஜய காந்த், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு எதிராக, பலமான கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளார்.
அவருடன் கூட்டணி சேர, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் ஆகியவை போட்டி போடுகின்றன.ஆனாலும், இந்த மூன்று கட்சிகளில், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்றும்; கூட்டணி அமைப்பதால் ஏற்படும், லாப, நஷ்டங்கள் குறித்தும் கணக்கு போட்டு வருகிறார். அத்துடன், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளை நடத்துவோரிடமும், பிரதிநிதிகள் மூலமாகவும், கருத்து கேட்டுள்ளார். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த அவர், 'தி.மு.க., - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என, மூன்று கட்சிகளுடனும் தொடர்பில் இருங்கள். தை பிறந்த பின், கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்குங்கள்' என, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக, நியமிக்கப் பட்ட தங்கள் கட்சி குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.எனவே, பொங்கலுக்கு பின், தே.மு.தி.க., எந்த பக்கம் சாயும் என்பது உறுதியாகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- -நமது நிருபர்-- -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE