தி.மு.க.,வில் எழுந்துள்ள உட்கட்சி பிரச்னை குறித்து, கட்சித் தலைவர் கருணாநிதியை, அவரது மூத்த மகனும், தென்மண்டல அமைப்புச் செயலருமான அழகிரி நேற்று சந்தித்து, அரை மணி நேரம் பேசினார். அழகிரியின் பேட்டி, அவரது ஆதரவாளர்களின் செயல்பாடு குறித்து, கடும் கோபம் அடைந்திருந்த கருணாநிதி, அதை அழகிரியிடம் நேரிடையாக கொட்டி தீர்த்துள்ளார். கருணாநிதியின் கடும் கோபம் காரணமாகவும், அவரது உத்தரவை அடுத்தும், அமைதி காக்க, அழகிரி முடிவு செய்துள்ளார்.
தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் மோதல், அடிக்கடி வெடிப்பது வழக்கம். அதுதொடர்பான விவகாரத்தில், அழகிரி ஆதரவாளர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு, பின் கை விடப்படுவதும் வழக்கமானதே. ஆனால், இந்த முறை, மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும், அழகிரி அளித்த பேட்டியும், கட்சியில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
அதனால், அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், அழகிரி விவகாரத்தில், இறுதியான முடிவு எடுக்க வேண்டும் என, கட்சித் தலைமைக்கு, கடும் நிர்ப்பந்தம் கொடுத்தார். அதன் விளைவாக, அழகிரி ஆதரவாளர்கள், ஐந்து பேர் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அழகிரியை சந்திக்கவும் கருணாநிதி மறுத்து விட்டார்.கடந்த, 6ம் தேதி, குடும்பத்தினருடன், கருணாநிதியை சந்திக்க, கோபாலபுரம் சென்ற அழகிரியால், தாயார் தயாளுவை மட்டுமே சந்திக்க முடிந்தது. கடும் கோபத்தில் இருந்த கருணாநிதி, அழகிரியை சந்திக்க மறுத்து விட்டார்.ஆனால், கருணாநிதியை சந்திக்காமல், இந்த பிரச்னை குறித்து பேசாமல், மதுரை திரும்ப கூடாது என்ற முடிவில் அழகிரி, சென்னையில் தங்கி விட்டார்.இடையில், அவரது குடும்பத்தினர் சிலர் எடுத்த முயற்சியின் பலனாக, நான்கு நாட்களுக்கு பின், கோபாலபுரத்தில் இருந்து, அழகிரிக்கு அழைப்பு வந்தது. நேற்று காலை, 10:15 மணிக்கு, மகள் கயல்விழி, மருமகன் வெங்கடேஷ் ஆகியோருடன், அழகிரி, கோபாலபுரம் சென்றார்.உள்கட்சி விவகாரம், குடும்ப பிரச்னை, குற்றச்சாட்டுகள் என, அரை மணி நேர பேச்சுவார்த்தையில், அனல் பறந்திருக்கிறது. அந்தளவுக்கு, கருணாநிதி கடும் கோபத்தை கொட்டி தீர்த்து விட்டார் என்கிறது, அறிவாலய வட்டாரம்.
அழகிரியிடம் கருணாநிதி பேசியது பற்றி, அறிவாலய வட்டாரம் கூறிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:ஒரே இடத்தில் உட்கார்ந்து, நீ அரசியல் நடத்துகிறாய். ஸ்டாலின், ஊர் ஊராக சுற்றி அரசியல் நடத்துகிறான். உன் பேச்சை கேட்டு, அவனை விட்டு விட்டால், கட்சியை நடத்த முடியாது. கட்சியில், கட்டுப்பாடு முக்கியம். அதை நீயும், உன் ஆதரவாளர்களும் மதிப்பதே இல்லை.நடவடிக்கை எடுத்தால், 'என் ஆதரவாளர் கள் மீது கை வைப்பதா?' என, நியாயம் கேட்க வந்து விடுகிறாய். உன் கூட இருக்கற ஆதரவாளர்கள் எப்படிபட்டவர்கள் என, முதலில் பார். உன்னை வாழ்த்தி போஸ்டர் ஒட்டினால் போதுமா? கட்சி வளர்ந்து விடுமா? நடந்த விஷயங்களை பார்த்தால், உன் மீதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு காரணம், என்னால் எடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.நீயே சொல்லியிருக்கிறாய், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை நான் கேட்கவில்லை என்று. அந்த பதவி, கேட்காமலேயே கொடுக்கப்பட்டது. அதை வைத்துக் கொண்டு, இந்த நேரத்தில், 'ஆக்டிவாக' செயல்பட வேண்டாமா?
உன் மீதும், உன் மகன் மீதும் ஜெயலலிதா, வழக்கு போட்டதாக சொல்கிறாய். ஸ்டாலின் மீதும் தான் வழக்கு போடப்பட்டுள்ளது. சட்டப்படி சந்திக்க வேண்டியது தான். ஆதரவாளர்கள் எல்லாரையும், ஸ்டாலின் இழுத்து விட்டதாக, புகார் கூறுகிறாய்; ஏன் ஓடினார்கள்? மீன் இருக்கும் குளத்தை நோக்கி தான், கொக்கு போகும்.இனியும் இப்படி நடந்து கொள்ளாதே; பேட்டி எதுவும் கொடுக்காமல், அமைதி யாக இரு; பொங்கலுக்கு பின், பேசிக் கொள்ளலாம்.இவ்வாறு, கருணாநிதி கோபமாக பேசியதாக, கூறப்படுகிறது.
அதற்கு, அழகிரியும் அவ்வப்போது சூடாக பதில் அளித்துள்ளார். ஆனாலும், கருணாநிதியின் கோபமும் சூடான பேச்சும், அவரை அமைதிப்படுத்தி விட்டது என்றும், கடைசியில், அழகிரிக்கு ஆறுதலாக, 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என, பேசி அனுப்பி வைத்துள்ளார் என்றும், தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.இதையடுத்து, அழகிரி, மதுரை திரும்புகிறார். கருணாநிதியுடன் நடந்த சந்திப்பு பற்றி, அழகிரி தன் ஆதரவாளர்களிடம் கூறி, அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE