லோக்சபா தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகளுக்கு, வரும் தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. உள்ளாட்சி பதவிகளில், 80 சதவீதத்திற்கும் மேல், அ.தி.மு.க.,வினரே உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அ.தி.மு.க.,வினரே பதவி வகிக்கின்றனர். நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ஏதேனும் ஒரு பதவியில் உள்ளனர்.அதனால், லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளையும், எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என, தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.
மத்தியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு, தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அதிக சீட்டுகளை பெறுவதன் அடிப்படையில், அனைவரும், அ.தி.மு.க., பக்கம் திரும்புவர். முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வாய்ப்பு கிடைக்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். அதனால், அவரை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கி விட்டது.
அ.தி.மு.க., அரசின் சாதனைகளை, அனைத்து மக்களும், அறிந்து கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகள், வீடு வீடாக, துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, நகரம், ஒன்றியம் வாரியாக, அனைத்து பகுதிகளிலும், பொதுக்கூட்டம் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல், தயாராகி விட்டதால், அடுத்த கட்டமாக, முதல்வரின் பிரசார பயணத் திட்டத்தை தயாரிக்கும் பணியில், அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு, இம்முறை, அனைத்து அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனையுடன், முதல்வரின் பிரசார பயணத் திட்டம், தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு, முதல்வர் சென்று வரும் வகையில், ஜெயலலிதாவின் பயணம் அமைய உள்ளது.சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளது. அனேகமாக, சென்னை திருவொற்றியூரிலோ அல்லது சைதாப்பேட்டையிலோ, முதல்வர், தன் பிரசாரத்தை துவக்குவார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE