பா.ஜ., பக்கம் கிரண்பேடி சாய்ந்தது ஏன்?| Dinamalar

பா.ஜ., பக்கம் கிரண்பேடி சாய்ந்தது ஏன்?

Added : ஜன 13, 2014
பா.ஜ., பக்கம் கிரண்பேடி சாய்ந்தது ஏன்?

அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும், டில்லியில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி. பின், ஹசாரே அணியில்இருந்து, கெஜ்ரிவால் விலகி, "ஆம் ஆத்மி' கட்சி துவக்கிய போது, அதற்கு ஆதரவும் தெரிவித்தார். அந்த கிரண்பேடி, "நரேந்திர மோடியால் தான்
நல்லாட்சி தர முடியும். அவருக்குதான், நான் ஓட்டுப் போடுவேன்' என, சமீபத்தில், கூறியுள்ளது, பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அவர், பா.ஜ., ஆதரவாளரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, இரு தலைவர்கள் முன்வைத்த வாதங்கள்:

"பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கே என் ஓட்டு' என, நாட்டின் முதல் பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியான, கிரண்பேடி கூறியுள்ளது, வியக்கவைக்கும் செய்தி அல்ல. அவர் மனதில் எப்போதும் நிலை கொண்டுள்ள, பா.ஜ., ஆதரவை, இப்போது பகிரங்கப்படுத்தி உள்ளார். அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்திய போதே, கிரண்பேடி, பா.ஜ., ஆதரவாளராகத்தான் இருந்தார். ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், பா.ஜ., தலைவர்கள் வீடு முன், ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என, கூறியவர் அவர்.
பா.ஜ., தலைவராக இருந்த, நிதின் கட்காரி மீது, ஊழல் புகார்கள் எழுந்தபோது, அவர் வீட்டு முன், ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என, வலியுறுத்தினார். "ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினருடன், பா.ஜ.,வில் இணைந்து விடுங்கள். உங்களுக்கு டில்லி முதல்வர் பதவி தருகிறோம்' என, கிரண்பேடிக்கு, பா.ஜ.,வும் அழைப்பு விடுத்தது. அன்றைய நிலையில், கிரண்பேடியால், அந்த முடிவை அமல்படுத்த முடியவில்லை.
பா.ஜ., அவருக்கு அளித்த மரியாதைக்கு, இப்போது, "மோடிக்கு ஓட்டுப் போடுவேன்' என, கூறுகிறார்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில், பா.ஜ., காங்கிரஸ் ஆதரவாளர்கள் என, இரு பிரிவினர் இருந்தார்களா என்றால், பா.ஜ., ஆதரவாளர்களே, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்தனர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரசுக்கு எதிரான பிரசாரங்கள், போராட்டங்கள் நடந்து இருக்காது.
டில்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது என்பதற்காக, அதன் சொல்படி, ஆம் ஆத்மி நடக்காது."ஆம் ஆத்மி அரசு அமைக்க வேண்டும்' என, டில்லி மக்கள் வாக்கு அளித்துள்ளனர். அதிலிருந்து, காங்கிரஸ் விலகி செல்ல முடியாமல், எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஆனந்த கணேஷ் , மாநிலக் குழு உறுப்பினர், தமிழக ஆம் ஆத்மி

டில்லி மக்களின் முழு ஆதரவு இல்லாமல், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தவர்கள், ஆம் ஆத்மி கட்சியினர். மக்களின் முழு ஆதரவுடனே ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால், டில்லியில் ஆட்சி அமைக்க, பா.ஜ., முன்வரவில்லை. ஆனால், கெஜ்ரிவால் போன்றவர் களுடன் துவக்கத்திலிருந்தே உடன் இருந்து, அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர் கிரண்பேடி. "நாட்டில் ஊழலை ஒழிக்கவும், நிலையான, வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும், மோடியே தகுதியானவர்' என, கிரண்பேடி கூறியதன் மூலம், உரிய நேரத்தில், அவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மின் ஆளுமை திட்டத்தில், வெளிப்படையான நிர்வாகத்தை, ஊழலற்ற நிர்வாகத்தைத் தர முடியும் என்பதை, மோடி ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
இதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின், விருதையும் மோடி பெற்றுள்ளார். ஒவ்வொரு வியாழக்கிழமையும், மக்கள் சந்திப்பையும் மோடி நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில், ஏதோ புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என, மக்கள் சந்திப்பை, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நடைமுறைப்படுத்தி உள்ளார். அதுவும் அனுபவம் ஏதுமின்றி, அவர் நடத்திய மக்கள் சந்திப்பில், குழப்பமே மிஞ்சியுள்ளது.
அதனால்தான், கிரண்பேடி போன்ற வர்கள், மோடியின் தலைமையில், மத்திய அரசு அமைய வேண்டும் என்ற கருத்தைக் கூறியுள்ளனர். ஆனால், "கிரண்பேடி, பா.ஜ., ஆதரவாளர்; அவருக்கு, டில்லி முதல்வர் பதவி அளிக்க, பா.ஜ., முன் வந்தது; அதன் நன்றிக கடனாக கிரண்பேடி பேசுகிறார்' என, கூறுவதெல்லாம் தவறானது.
பா.ஜ., முதல்வர் வேட்பாளரை அறிவித்து, டில்லி தேர்தலை சந்தித்தது. பா.ஜ.,வில், தலைவர்களுக்கு பஞ்சம்இல்லை. வெளியிலிருந்து, ஒருவரை அழைந்து வந்து முதல்வராக்க வேண்டிய அவசியமும் இல்லை.

தமிழிசை சவுந்திரராஜன் , தேசிய செயலர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X