''காங்கிரசைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை,'' என, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர், இளங்கோவன் பேசியதாவது:தமிழக காங்கிரஸ், இப்போது புத்துணர்வு பெற்றுள்ளது. அதை பல கூட்டங்கள் வாயிலாக காண முடிகிறது. அதற்கு, இந்த கூட்டமும் சாட்சி. கடந்த காலங்களில், நியமிக்கப்பட்ட சில மாவட்ட தலைவர்கள், தடம் புரண்டு, வழி மாறி, தங்களின் பைகளை நிரப்புவதிலேயே கவனமாக இருந்தனர். திராவிட கட்சிகளுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. எங்களுக்கும் விசிலடிக்க தெரியும் என, இளைஞர் காங்கிரசார், இன்று எழுச்சி பெற்றுள்ளனர்.சீமான் போன்றவர்கள், காங்கிரசை திட்டுவதோடு, விமர்சனமும் செய்கின்றனர். அவர்களை போன்றவர்களுக்கு, பேச்சுரிமை, எழுத்துஉரிமையை வாங்கித் தந்ததே காங்கிரஸ் தான். காங்கிரசுக்கு அனுமதிக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும்.
காங்கிரசை பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை, இந்த தேர்தலில் ஏதாவது மாற்றம் நடந்து, வேறு யாராவது ஆட்சிக்கு வந்தாலும், ஓரிரு ஆண்டுகள் தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.கூட்டணி யாரோடு என்பதில் எங்களுக்கு கவலை இல்லை. அதை தலைமை முடிவு செய்யும். அது மூன்றெழுத்தாக இருந்தாலும், நான்கெழுத்தாக இருந்தாலும், எதற்கும் வித்தியாசம் இல்லை. கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிட, தமிழக காங்கிரஸ் தயாராகவே உள்ளது.இவ்வாறு, இளங்கோவன் பேசினார்.
- - நமது நிருபர் ---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE