பொங்கலன்று, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமா?| Dinamalar

பொங்கலன்று, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமா?

Added : ஜன 16, 2014 | கருத்துகள் (1)
Share
தை முதல் தேதியை, பொங்கல் திருநாள் பண்டிகையாகவும், சித்திரை முதல் தேதியை, தமிழ் புத்தாண்டு தினமாகவும், காலங்காலமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாள், தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனாலும்,
பொங்கலன்று, தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமா?

தை முதல் தேதியை, பொங்கல் திருநாள் பண்டிகையாகவும், சித்திரை முதல் தேதியை, தமிழ் புத்தாண்டு தினமாகவும், காலங்காலமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாள், தமிழ் புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டு விழாவையும் சேர்த்து கொண்டாட வேண்டும்' என, கூறி வருகிறார். தி.மு.க.,வினரும், அதைப் பின்பற்றுகின்றனர். ஆனால், கருணாநிதியின் வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொண்டனரா அல்லது நிராகரித்து விட்டனரா என்பது குறித்து, அரசியல் பிரபலங்கள், இருவர் தந்த விளக்கம் இதோ:

தேவநேய பாவணர் போன்ற மூத்த தமிழறிஞர்கள், 500 பேர் இணைந்து, தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தையே, கருணாநிதி, அரசாணையாக பிறப்பித்து, தமிழ் புத்தாண்டு விழாவை தை முதல் நாளில் கொண்டாட நடைமுறைப்படுத்தினார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்த நடைமுறை மாற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும், கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, தை முதல் நாளையே, தமிழ் புத்தாண்டு தினமாக, தி.மு.க,வினர் மட்டுமின்றி, பொதுமக்களில், ஏராளமானோர் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த நாளுக்கு மற்றொரு சிறப்பாக, பொங்கல்
விழாவையும், வழக்கம் போல, அதே நாளில் கொண்டாடுகின்றனர். பொதுமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்கின்றனர். அதில், 'இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், தொலைபேசியில் பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, தெரிவித்து கொள்கின்றனர். மேலும், எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் மூலமாக, அனுப்பி வைக்கப்படும் வாழ்த்து செய்திகளிலும், பொங்கல் விழாவுடன் தமிழ் புத்தாண்டு விழாவும் இடம் பெற்றிருப்பது, உலக தமிழர்கள் அனைருக்கும், கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். ஆங்கில புத்தாண்டு தினத்தை கொண்டாடுவது போல, 'கேக்' வெட்டி, பட்டாசு கொளுத்தி, கொண்டாடவில்லை. தமிழ் பண்பாட்டின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் தான், கொண்டாடுகின்றனர். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, கருணாநிதி அமல்படுத்திய நடைமுறையை, முதல்வர் ஜெயலலிதா மாற்றினாலும், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

டி.கே.எஸ்.இளங்கோவன் , தி.மு.க., - எம்.பி.,

தை முதல் தேதியை, காலங்காலமாக, பாரம்பரியமாக, பொங்கல் விழாவாக மட்டுமே, தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அய்யப்பனுக்கு மாலை போட்டவர்கள், சபரி மலைக்கு தான் செல்ல வேண்டும். முருகனுக்கு மாலை போட்டவர்கள், பழநிக்குத்தான் போக வேண்டும். கார்த்திகை முதல் தேதியில், மாலை அணிந்து, சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள், ஏப்ரல், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் செல்வது உண்டு.
ஐப்பசி அமாவாசையில் தீபாவளி பண்டிகை வரும்; அதை மாற்ற முடியுமா? தை மாதத்தில் தான் தைப்பூசம் வரும். அதை சித்திரைக்கு மாற்ற முடியுமா? அதேபோல் தான், தமிழ் புத்தாண்டு விழாவும். அது, சித்திரை மாதம் முதல் நாள் தான், கொண்டாடப்பட வேண்டும். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும், ஒரு நடைமுறையை, இஷ்டத்துக்கு மாற்றிக் கொள்வது என்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள். மாட்டுப் பொங்கல் என்றால், அன்று ஜல்லிக்கட்டு நடக்கும். காளைகள் சீறிப்பாயும். ஒவ்வொரு பண்டிகையிலும், ஐதீகம் உண்டு. ஐதீகத்தில் அரசியலை நுழைக்க கூடாது. பொங்கல் விழா கொண்டாடிய மக்கள் அனைவரும், தங்கள் வீட்டிற்கு வெளியே, "ஹேப்பி' பொங்கல் என்றே, மாக்கோலம் வரைந்துள்ளனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என, எழுதவில்லை. நான் பொதுக் கூட்டம் ஒன்றுக்காக ராஜபாளையம் சென்றேன். அப்போது பழநிக்கு பாதையாத்திரை சென்றவர்கள் எனக்கு "ஹேப்பி' பொங்கல் என்றே, வாழ்த்து கூறினர்.
"டிவி'யில், காட்டப்பட்ட செய்திகளில், பொதுமக்கள் அனைவரும், பொங்கலோ பொங்கல் என்றே தெரிவித்தனர். தி.மு.க.,வினர் வேண்டு மானால், தமிழ் புத்தாண்டாக கொண்டாடிக் கொள்ளலாம். அது, அவர்களின் விருப்பம். அதில், நாம் தலையிடத் தேவையில்லை.

நடிகர் ராமராஜன், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X