ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோருக்கு போட்டியாக, முன்றாவது அணி சார்பில், பிரதமர் வேட்பாள ராக வேண்டும் என்ற இலக்குடன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி காய் நகர்த்தலை துவக்கியுள்ளது, தேசிய அரசியலில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில், அனைத்து சமூக ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு சகோதரத்துவம், சமத்துவம் என்ற கொள்கையை முன்வைத்து, ஆட்சி நடத்தியவர் மாயாவதி. மக்கள் பணத்தை வாரியிறைத்து பல கோடி ரூபாயை வீணாக்கினார். இதனால், அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியிடம் ஆட்சியை இழந்தார்.
அவப்பெயர் அதிகரிப்பு : உ.பி.,யில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கு அதிகளவில் வெற்றிப்பெறும் கட்சி, டில்லியில் கோலோச்ச முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் தான், உ.பி.,யில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில், போட்டி யிட்டு வெற்றிப் பெறுவதை காங்., தலைமை விரும்புகிறது. உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசுக்கு,மக்கள் மத்தியில் அவப்பெயர் அதிகரித்துள்ளது.
முசாபர் நகர் கலவரத்தில், 60 பேர் கொல்லப்பட்டது உட்பட, பல்வேறு பிரச்னைகள் அக்கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளன. தற்போது, உ.பி., அரசு மீதான மக்களின் அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, வரும் லோக்சபா தேர்தலில், கூடுதல் இடங்களைப் பிடிக்க வேண்டும் என, வியூகங்களை வகுக்க துவங்கியுள்ளார் மாயாவதி. நாடு முழுவதும் கடந்த, 15ம் தேதி, தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியவர், "நாடு முழுவதும் உள்ள தலித் மக்கள், முஸ்லிம்கள், உயர் ஜாதியினரை ஒருங்கிணைக்க வேண்டும். அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்' என கூறியுள்ளார்.
இந்த பார்முலாவை, நாடு முழுவதும் கொண்டு செல்ல அவர் ஏற்பாடு செய்துள்ளார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு, வட மாநிலங்கள் மட்டுமின்றி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாநில அமைப்புகள் மூலம், தன் கொள்கையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதன் மூலம், லோக்சபா தேர்தலில், தென் மாநிலங்களிலும் கட்சி சில இடங்களைப் பிடிக்கும் என, நம்புகிறார். அப்படி நடக்கும் பட்சத்தில் தேசிய அளவில் மூன்றாவது அணி சார்பில் பிரதமராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் எனவும், நம்புகிறார்.
தீவிர பிரசாரம் : இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர், கூறியதாவது: மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கும் தகுதி தனக்கு இருப்பதாக வும், அந்த வாய்ப்பு தன்னைத் தேடி வரவேண்டும் என்றால், லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை பிடிக்க வேண்டும் என மாயாவதி நினைக்கிறார். அதற்கான ஏற்பாடு
களை செய்யுமாறு கட்சியினரை வலியுத்தியுள்ளார். அதற்காக, தென் மாநிலங்களிலும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இதற்காக, தென் மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜிக்கு போட்டியாக, பிரதமர் பதவிக்கு மாயாவதியும் ஆசைப்படுகிறார். அது நடக்க, ஏராளமான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE