தமிழக மீனவர் பிரச்னையை தீர்ப்பதில், தி.மு.க.,வும் அ.தி.மு.க.வும், தாங்கள் தான், நடவடிக்கை எடுப்பதாக, மார்தட்டிக்கொள்கின்றனர். ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம், கைது செய்வது தொடர் கதையாக இருக்கிறது. இருப்பினும், தங்களின் கடந்த கால நடவடிக்கைகளை, இரு கட்சிகளும் பட்டியலிட்டு கொண்டு தான் உள்ளன. மீனவர்களோ, தங்கள் நலன் காக்க, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., - தி.மு.க., மீனவர் அணி நிர்வாகிகளின் உணர்ச்சிகரமான மோதல் இதோ:
தமிழக மீனவர் பிரச்னையானாலும் சரி, ஈழத் தமிழர் பிரச்னையானாலும் சரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், பிரச்னை தீர்ந்து விட்டது என, முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார். தமிழக பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, முடிவு எடுக்க அவர் தயாராக இல்லை.
"இலங்கை சிறையில் வாடும், தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்' என, நாகபட்டினத்தில், மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை, தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதி தான், கட்சியின் மூத்த தலைவர்களை அனுப்பி, மீனவர்களுடன் பேச்சு நடத்தியதோடு, இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அதன் பிறகே, இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு, நாள் குறித்தார், முதல்வர். "மீனவர்கள், இரண்டு நாட்களில் விடுவிக்கப்படுவர்' என்றார். தமிழக மீனவர் பிரச்னையாகட்டும், ஈழத் தமிழர் பிரச்னையாகட்டும், தி.மு.க., தலைவர் எடுத்த நடுவடிக்கைகளை நாடு அறியும். ஆனால், அவரை ஏமாற்றும் வகையில், மத்திய அரசு, பொய்யான தகவல்களைக் கொடுத்து, ஈழத் தமிழர்களுக்காக, அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தைக் கைவிட வைத்தது. இம்மாதம், 20ம் தேதி நடக்கும், இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில், சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால், தி.மு.க., மீனவர் அணி சார்பில், போராட்டங்களை துவக்குவோம். எங்களைப் பொறுத்தவரை, மீனவர் பிரச்னையைத் தீர்க்க யார் முன் வந்தாலும், அவர்களுடன் இணைந்து செயல்படத் தயார். மீனவர் பிரச்னையை வைத்து, அரசியல்
நடத்த, தி.மு.க., ஒருபோதும் விரும்பியது இல்லை.
பெர்னாட் ,தி.மு.க., மீனவர் அணி செயலர்
"தமிழக மீனவர்கள் பேராசைக்காரர்கள். அவர்கள், இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்கு மீன் பிடிக்க செல்வதால் தான், பிரச்னை ஏற்படுகிறது' என, இலங்கை அதிபர் ராஜபக்?ஷ கூற வேண்டியதை, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகிறார். "இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், இரண்டு நாட்களில் விடுவிக்கப்படுவர்' என, முதல்வர் ஜெயலலிதா கூறியபோது, "முதல்வர் எப்படிக் கூறுகிறார்; அவருக்கு எப்படித் தெரியும்' என, வேண்டாத விவாதத் தில் ஈடுபட்டார் கருணாநிதி.
அவருக்கு தமிழக மீனவர்கள் மீது, துளியும் அக்கறை கிடையாது. கேரள மீனவர் இருவரை, இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்ற போது, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. "இரு நாட்டு உறவே இதனால், பாதிக்கப்படும்' என, எச்சரித்தது. ஆனால், நாள்தோறும் அவதிப்படும், தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை. தமிழக காங்கிரசார், தமிழர்கள் எக்கேடு கெட்டால் என்ன, என்ற எண்ணத்தில் உள்ளனர். தி.மு.க.,வும், தமிழர்கள் மீது அக்கறை உள்ளதுபோல் காட்டிக் கொள்கிறது. ஏதோ, அவர்கள் சொன்னதால் தான், இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்ற, தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அப்படி அக்கறை உள்ளவர்கள், மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டியது தானே. இல்லாத ஒன்றை, இட்டுக்கட்டி சொல்லி, அ.தி.மு.க., அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற, எண்ணத்தில், தமிழக பிரச்னைகளை தி.மு.க., அணுகுகிறது.
அதில், மீனவர் பிரச்னையும் விதி விலக்கல்ல.
கலைமணி, அ.தி.மு.க., மீனவர் அணி செயலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE