சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிய நிலையில், 2014ல் புதிய பாதையில் பயணிக்க உள்ளது. 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இருந்து, தற்போதைய நிலையை பார்க்கும் போது, நாட்டின் ஜனநாயக பாதையில் புதிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சுதந்திர பெற்ற பின், நேரு தலைமையிலான ஆட்சி நடந்தது. இது ஜனநாயகத்தின் குழந்தை பருவம் அல்லது ஆரம்ப வளர்ச்சி என்று கூறலாம். நேரு காலம் வரை, ஒரு கட்சி ஆட்சி முறையே நாட்டில் தலைதூக்கி இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் காங்., ஆட்சி தான் நடந்தது.
நேரு மறைவுக்குப்பின், காங்., கட்சிக்கு சோதனைக் கட்டம் ஏற்பட்டது. ஏனெனில், நேருவின் மகள் இந்திரா, ஆட்சி அதிகாரத்துக்கு வர விரும்பினார். இது கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. இந்திரா தலைமையில் ஒரு பிரிவும், மற்றவர்கள் ஒரு பிரிவாகவும் காங், பிரிந்தது.
இதனால் பல மாநிலங்களில் ஆட்சியை காங்., இழக்கத் தொடங்கியது. பல மாநில கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. மத்தியிலும் 1977ல் காங்., இல்லாத ஆட்சி முதன் முதலாக அமைந்தது. இருப்பினும் காங்கிரசின் தலைமை, என்பது மாறாமல் ஒரு குடும்பத்தின் கையிலேயே இருந்து வருகிறது.
மற்றொரு புறம், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து பிரிந்து உருவானது ஜன சங் அமைப்பு. இதிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது. இக்கட்சியும் சில ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
காங்கிரசுக்கு சவால்:
வருகிற தேர்தலில் காங்., கட்சிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனெனில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி, சிறந்த அரசியல்வாதியாக கருதப்படுகிறார்.
உண்மையில், 2014 தேர்தலில் காங்., கட்சி தோல்வியை சந்திக்கும். அது, அதிகபட்சம் 110 - 120 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலை உள்ளது. அதே நேரம் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளதால், பா.ஜ., 150 - 160 இடங்களில் வெற்றி பெறலாம். ஆனால் பெரும்பான்மை இலக்கான 273 இடங்களை பெற வேண்டுமெனில் பலமான கூட்டணி வேண்டும்.
இதற்கிடையில் மாநில கட்சிகளும் மார் தட்டிக் கொண்டு நிற்கின்றன. ஜெயலலிதா, மம்தா, முலாயம் சிங், மாயாவதி என 3வது அணியின் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. காங்., கட்சிக்கு 3 இலக்க இடங்கள் கிடைப்பது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், ராஜஸ்தான் மற்றும் டில்லி மாநில சட்டசபையின் முடிவுகள், அக்கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்., கட்சிக்கு ஆந்திரா பெரிய பலமாக இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில், அங்கு "தெலுங்கானா' தனி மாநில அறிவிப்பு வெளியாகி, அம்மாநிலத்தில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் எடியூரப்பா மீண்டும் பா.ஜ., வில் சேர்ந்திருப்பது பா.ஜ., வுக்கு சாதகம். மகாராஷ்ட்ராவும் ராஜஸ்தானைப் போல மாறலாம்.
ஊழலுக்கு பிரதான இடம்:
காங்., தோல்வி அடைந்தால், அதற்கு முதல் காரணம் ஊழலாக இருக்கும். ஏனெனில், ஐ.மு., கூட்டணியின் 2வது ஆட்சி பெரும்பாலும் ஊழல் மிக்கதாகவே இருந்தது. வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவையும் காரணங்கள். காங்., கட்சியினர், வருங்கால தலைவரான ராகுலும், அவரது கட்சியினரைத் தவிர, எந்த விஷயத்திலும் பொதுமக்களை கவர தவறிவிட்டார். காங்., கட்சியின் தோல்வி, ஜனநாயகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டை பெரும்பகுதி ஆண்ட காங்., ஆட்சியில், படித்த உயர் வகுப்பினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு இருந்தது. பாதி படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள் வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் இருந்தனர். இதன் காரணமாக மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறை பரிசீலிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் பின் 1989ல் இருந்து காங்., கட்சி, ஏதாவது சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைத்தது. நாட்டு மக்களிடம் தேசிய பிரச்னைகளுக்குப் பதிலாக, ஜாதி வாரி ஓட்டுகள் அளிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சிறுபான்மையினர் நிலை:
தனது பிரச்சாரங்களில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி ஆகியவை பற்றியே பேசி வந்த நரேந்திர மோடி, "கோயில்களை கட்டுவதை விட, அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்' என பேசியது, அவர் தனது பாதையை திருப்பியுள்ளார் எனக் காட்டுகிறது.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, வகுப்புவாத மோதல்கள் தொடர்கிறது. சிறுபான்மையினர் தொடர்ந்து பா.ஜ., வுக்கு வாக்களிக்காமல் இருக்கப்போவதில்லை. காரணம், சமீபத்தில் கூட மதச்சார்பற்ற கட்சி என கூறிக்கொள்ளும் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருக்கும் உ.பி.,யில், முசாபர்நகரில் கலவரம் ஏற்பட்டது. சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தானே தவிர, போலி வாக்குறுதிகளும், வெற்று வசனங்களும் அல்ல.
இந்திய அரசியலில் மூன்று விதமான நிகழ்வுகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. முதலாவது மண்டல் கமிஷன், 2வது மதச்சார்பின்மை - பிரிவினைவாத அரசியல், 3வது காங்கிரசின் ஆதிக்கம். முதலாவது ஓ.பி.சி., மற்றும் எஸ்.சி.,/ எஸ்.டி., ஆகிய பிரிவினரை ஜனநாயக அரசியலில் சேர்ப்பது முக்கியத் தேவை. 2வது மதச்சார்பற்ற சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியே நாட்டுக்கு முக்கியம் என்பதை அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. மூன்றாவது, காங்., குடும்ப ஆட்சி, ராகுலோடு முடிவு பெறுவது நிச்சயம். ஏனெனில், அங்கு வலிமையான தலைவர்கள் இல்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு முதல் வித்தியாசமான இந்தியா உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE