மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த, ஜெயந்தி நடராஜன் திடீரென கழற்றி விடப்பட்டார். அவரது, பதவி பறிப்புக்கு இரு காரணங்கள் கூறப்படுகிறது. கட்சி பணிக்கு செல்வதற்காக, அமைச்சர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது முதல் காரணம். மற்றொன்று, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் நடந்துகொள்ளவில்லை. அதனால், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயந்தியை அனுப்பிய பின், ஆண்டுக்கணக்கில் நிலுவையிலிருந்த பைல்கள், துரித கதியில் கிளியர் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த போக்கு குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் அதிரடி கருத்துக்கள் இங்கே:
காங்கிரஸ் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு. சாதாரண நடுத்தர மக்களின் பொருளாதாரத் தைப் பற்றி, காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை. குறிப்பாக, நாட்டின் கனிம வளங்களை பாதுகாத்து, அதன் பயனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், கனிம வளங்களை கொள்ளையடித்து, கார்ப்பரேட் நிறுவனங் கள் பெரும் லாபம் ஈட்ட, மத்திய அரசு துணை போகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள ஒருசில அமைச்சர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பயனடையும் வகையில், கனிம வளங்களை கொள்ளையடிக்க, அனுமதி தராமல் இருந்து வருகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து நீக்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள், கனிம வளங்களை கொள்ளையடிக்க, சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது என்பது, காங்கிரஸ் அரசின் அக்கிரமமான செயல். அப்படி ஜெயந்தி நடராஜன் நீக்கப்பட்ட, ஒருசில வாரங்களிலேயே, பல்வேறு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த, 70 விண்ணப்பங்களின் மீது, மத்திய அரசு அசுர வேகத்தில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது, ஜெயந்தி நடராஜன் நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் தான், மாற்றப்பட்டார் என்ற புகார் எழுந்தபோது, 'இல்லை, இல்லை அவர், கட்சிப் பணிக்கு அனுப்பப்படுகிறார்' என, காங்கிரசார் கூறினர். ஆனால், அவர் சென்ற சில வாரங்களில், 70 விண்ணப்பங்கள் மீது, சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பதன் பின்னணி என்ன? இதன்மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகவே காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
- ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், கட்சிப் பணிக்கு செல்ல வேண்டும் என, காங்கிரஸ் தலைமை முடிவெடுத்து அனுப்பியுள்ளது. இதை, ஜெயந்தி நடராஜனே தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரை அமைச்சர் பதவியிலிருந்து அனுப்பிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின், சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய ஆலைகள் அமைக்க அனுமதி அளித்து உள்ளது என, கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் அரசு எதைச் செய்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் அணுகுபவர்கள், எந்த கருத்தை வேண்டுமானாலும் கூறலாம். மத்திய சுற்றுச்சூழல் துறை மட்டுமே, மத்திய அரசின் ஒட்டுமொத்த துறை அல்ல. ஒரு திட்டம் குறித்து, ஒவ்வொரு துறையையும் ஆலோசித்து, வளர்ச்சிக்கான பணிகளை முன்வைக்கும். இந்த ஒட்டுமொத்த கருத்தை ஏற்றுத்தான், ஒரு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில், கூடங்குளம் அணுமின் திட்டத்தை, அ.தி.மு.க., துவக்கத்தில் எதிர்த்தது. இப்போது, மின்சாரம் அவசியம் என, கூடங்குளம் திட்டத்தை வரவேற்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதோடு, வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். இதுதான் யதார்த்தம். வளர்ந்த நாடுகளில் எல்லாம் கூட வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்குமான மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதை சமாளித்துதான், தொழில் வளத்தையும், வேலைவாய்ப்பையும் மேம்படுத்த முடியும். போக்குவரத்துக்கு இடையூறாக மரம் இருந்தால், அதை வெட்டிவிட்டு, பத்து மரங்களை நடலாம் என்று தான், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சொல்கின்றனர். எனவே, புதிய தொழில் துவங்க, அனுமதி அளிப்பதன் மூலம், மத்திய அரசு கார்ப்பரேட்களின் அரசு என, கூற முடியாது.
அமெரிக்கை நாராயணன், செய்தித் தொடர்பாளர், தமிழக காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE