முலாயம் யாதவ்- லாலு பிரசாத் இடையே எப்போதும் ஒரு "தினுசான' உறவு உண்டு. இருவரும் காங்கிரசின் நண்பர்கள். ஆனால் தங்களுக்குள் இல்லை.
இந்த பிரபல தலைவர்கள் இடையேயான கசப்புணர்வு, பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஒருவர், மற்றொருவரின் வளர்ச்சியை எப்போதும் ஏற்றதில்லை.
1997ம் ஆண்டில், போதிய ஆதரவு இல்லாததால் தேவகவுடா ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமராக முலாயம் சிங் யாதவை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த லாலு, ""முலாயம் சிங்கை பிரதமராக முன்மொழிவதை விட, விஷத்தை குடிக்கச் சொன்னால் குடித்து விடுவேன்'' என சாடினார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட லாலு, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். உடனே அவர், உ.பி., முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்தார்.
அப்போது ஆளும் சமாஜ்வாடி கட்சியை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகத் தான், முலாயம், லாலுவை காங்கிரசின் எடுபிடி என விமர்சித்தார்.
சமாஜ்வாடிக்கு இருக்கும் சிறுபான்மையினர் ஆதரவை, லாலுவின் பிரசாரம் மூலம் அசைத்துப் பார்க்கலாம் என காங்., கணக்குப் போடுகிறது. ஐ.மு., கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில், பீகாரில் காங்., - லாலு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு கணிசமான இடங்களை கைப்பற்றியது. 2009ல் லாலுவுக்கு வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இதையடுத்து, அதற்குப் பதிலாக சமாஜ்வாடி கட்சியை காங்., சேர்த்துக்கொண்டது. அப்போது சமாஜ்வாடியை மதச்சார்பற்ற கட்சி என்று கூறிய காங்., தற்போது, அதே சமாஜ்வாடியை விமர்சிக்கிறது. இதிலிருந்து, காங்., கட்சியின் இரட்டை வேடம் புரிகிறது.
இதற்குப் பதிலடி தரும் விதமாக, முலாயம் விரைவில் பீகாரில் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் தேர்தலில் பீகாரில் அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக அங்கு ஆட்சியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் சமாஜ்வாடி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் காங்., - ராஷ்ட்ரி ஜனதா தளத்துக்கு சவால் விட சமாஜ்வாடி எண்ணியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE