விஜயகாந்தை குழப்பிய கருணாநிதி வியூகம்| Vijayakanth confuse over Karunanidhi's poltical move | Dinamalar

விஜயகாந்தை குழப்பிய கருணாநிதி வியூகம்

Updated : ஜன 20, 2014 | Added : ஜன 19, 2014 | கருத்துகள் (84)
Share
லோக்சபா தொகுதிகளும், ராஜ்யசபா சீட்டும் தருவதாகக் கூறி, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேரம் பேசிய தி.மு.க., தலைமை, திடீரென்று ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்து, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பேச்சில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இந்த விஷயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வியூகம் புரியாமல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குழப்பம் அடைந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரம்
விஜயகாந்தை, குழப்பிய, கருணாநிதி வியூகம்

லோக்சபா தொகுதிகளும், ராஜ்யசபா சீட்டும் தருவதாகக் கூறி, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேரம் பேசிய தி.மு.க., தலைமை, திடீரென்று ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்து, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பேச்சில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.இந்த விஷயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வியூகம் புரியாமல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குழப்பம் அடைந்துள்ளதாக, அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் இருந்து ஆறு பேரை தேர்ந்தெடுப்பதற்கான ராஜ்யசபா தேர்தல், அடுத்த மாதம், 7ம் தேதி நடக்கிறது. இதில், 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தால், ஒரு எம்.பி., பதவி கிடைக்கும். தி.மு.க.,வும் தே.மு.தி.க.,வும் இணைந்து, ஆதரவளித்தால், ஒருவரை எம்.பி., ஆக்கலாம்.


ஆதரவு அளிக்கும்:


இந்நிலையில், தே.மு.தி.க.,வுக்கு அந்த எம்.பி., பதவியை விட்டுத் தர, தி.மு.க., தரப்பு சம்மதித்ததாகவும், தே.மு.தி.க., சார்பில், நிறுத்தப்படும் வேட்பாளருக்கு தி.மு.க., ஆதரவு அளிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின.ஆனால், அதற்கு நேர்மாறாக, தி.மு.க., சார்பில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து, வேட்பாளராக திருச்சி சிவா நிறுத்தப்பட்டுள்ளார். இதுதான், தே.மு.தி.க., வட்டாரத்தில் கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.கூட்டணி தொடர்பாக, தே.மு.தி.க., தன் முடிவை இன்னமும் வெளிப்படுத்தவில்லை. அதனால், அவசரப்பட்டு, தி.மு.க., ஏன் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்? அப்படியென்றால், தே.மு.தி.க.,வுடன் இனிமேல் கூட்டணி பேச்சு நடத்தப்பட மாட்டாது என, அர்த்தமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:


தி.மு.க.,வில் எதிர்ப்பு:

கூட்டணி பேச்சு நடந்தபோது, 12 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டு தே.மு.தி.க., தரப்பில் பேரம் பேசப்பட்டது. ஆனால், 12 லோக்சபா தொகுதிகள் தர, தி.மு.க.,வில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், ராஜ்யசபா சீட்டை பொறுத்தவரையில், எந்த பிரச்னையும் இல்லை.தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் நிறுத்தப்பட்டால், அவரை ஆதரிக்கவும் தயார் என்ற நிலையில் தான், கூட்டணிக்கு தூது விடப்பட்டது. ஆனால், விஜயகாந்த் எந்த உறுதியும் கூறவில்லை.இந்நிலையில், 'ஒன்று படுவோம்; ஊழலை ஒழிப்போம்' என்று, அக்கட்சியின் மாநாட்டு கோஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, எதற்காக என்கிற விளக்கத்தையும் விஜயகாந்த் கூறவில்லை.


காத்திருக்க வேண்டாம்:


அதோடு, கூட்டணி குறித்து எந்த முடிவும் சொல்லாமல், தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். எனவே, விஜயகாந்த் முடிவுக்காக, காத்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு கருணாநிதி வந்து விட்டார். அதன் வெளிப்பாடு தான், கருணாநிதியின் பேட்டியும், வேட்பாளர் அறிவிப்பு வியூகமும்.கடந்த முறை நடந்த ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,விடம் ஆதரவு கேட்கப்பட்டது. கடைசியில், தே.மு.தி.க., தனியாக வேட்பாளரை நிறுத்தி, மூக்கறுப்பு செய்தது. ஆனாலும், தி.மு.க., தான் வெற்றி பெற முடிந்தது.அதேபோல், இந்த முறையும் விஜயகாந்த் போட்டிக்கு வந்தாலும், தன் வேட்பாளரை வெற்றி பெற செய்ய முடியும் என, கருணாநிதி நம்புகிறார். இனி, கூட்டு சேர விஜயகாந்த் தானாக முன்வந்து, கேட்டுக் கொண்டால் மட்டுமே, தி.மு.க., தன் வேட்பாளரை வாபஸ் பெறும். அந்த வகையில், இது விஜயகாந்துக்கு வைக்கப்பட்ட, 'செக்.'இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X