ராஜ்யசபா தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் இடம்பெற, அ.தி.மு.க.,வினர் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த, முகமதுஅலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மா.கம்யூ., கட்சியை சேர்ந்த ரங்கராஜன், ஆகியோரின் பதவிக் காலம், ஏப்ரல் 2ம் தேதி, நிறைவு பெறுகிறது. இப்பதவிக்கு, அடுத்த மாதம் 7ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல், இம்மாதம் 21ம் தேதி துவங்குகிறது.
கடந்த ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., முதலில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இம்முறை தி.மு.க., முந்திக் கொண்டது. அக்கட்சி ஒரு இடத்தை பிடிப்பதற்காக, முன்னாள் ராஜ்யசபா எம்.பி., சிவாவை, வேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், அ.தி.மு.க., எந்தக்கட்சி ஆதரவும் இல்லாமல், நான்கு இடங்களை பிடிக்கலாம். மற்ற கட்சிகள் அனைத்திற்கும், பிற கட்சிகளின் ஆதரவு தேவை. மா.கம்யூ., கட்சி ஒரு இடத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவை நாட முடிவு செய்துள்ளது. போட்டி ஏற்பட்டால், பிற கட்சிகளின் உதவியைப் பெறலாம் என, தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இச்சூழ்நிலையில், உறுதியாக போட்டியிட உள்ள, நான்கு இடங்களுக்கு, வேட்பாளரை தேர்வு செய்யும் பணி அ.தி.மு.க.,வில் நடந்து வருகிறது. இப்பட்டியலில் இடம் பெற, அ.தி.மு.க., முக்கியஸ்தர்கள், கட்சியின் நால்வர் அணியை முற்றுகையிட்டுள்ளனர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சிலரும், இப்பதவிக்கு முயற்சித்து வருகின்றனர்.தற்போதைய நிலவரப்படி, ராஜ்யசபா எம்.பி., பாலகங்காவிற்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கடந்த தேர்தலில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின் வாபஸ் பெறப்பட்ட, தங்கமுத்துவிற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். மீதமுள்ள இரு இடங்களுக்கு, கடும் போட்டி உள்ளது. இரண்டு நாட்களில், வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளதால், ஓரிரு நாளில், வேட்பாளர் பட்டியலை, முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE