ராஜ்யசபா தேர்தலில், தன் ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதன் மூலம், காங்கிரஸ் கூட்டணியில் சேர்வதற்கான முயற்சிக்கு, மீண்டும் கனிமொழி புத்துயிர் கொடுத்துள்ளதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
காங்கிரசுடன் இருந்த உறவை முறித்துள்ள தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. காங்கிரசுடன் கூட்டு சேர்வதற்கு ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பு காரணமாக, இம்முடிவை தி.மு.க., பொதுக்குழு எடுத்தது.ஆனால், இந்த முடிவு, கனிமொழிக்கு பிடிக்கவில்லை. அவர் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., சேர வேண்டும் என, விரும்புகிறார். அதற்காக, சமீபத்தில், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை அழைத்து வந்து, கருணாநிதியை சந்திக்க செய்தார்.அதன் அடுத்த கட்டமாக, இப்போது ராஜ்யசபா தேர்தலில், தன் ஆதரவாளரான திருச்சி சிவாவை நிறுத்தி உள்ளார். அதன்மூலம், மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு அவர் முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளார் என, அவரது ஆதரவு வட்டாரம் கூறுகிறது.
இதுகுறித்து, கனிமொழி ஆதரவாளர்கள் கூறியதாவது:திருச்சி சிவா ஜெயிப்பதற்கு, காங்கிரசின்ஆதரவு அவசியம். தற்போதுள்ள நிலையில்,தே.மு.தி.க.,வும் வேட்பாளரை நிறுத்தினால், தேர்தலில் போட்டி வந்து விடும்.அப்போது, காங்கிரசின் ஆதரவு தான், தி.மு.க.,வின் வெற்றிக்கு முக்கியமான ஆயுதமாக அமையும்.கனிமொழி போட்டியிட்டபோது, காங்கிரசுடன் கூட்டணி இல்லை; ஆனாலும், தி.மு.க., கேட்டுக் கொண்டதன்படி, கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அப்போது, எந்த நிபந்தனையும் விதிக்காமல், காங்கிரஸ் ஆதரவு அளித்தது.இப்போது, தன் ஆதரவாளர்வெற்றி பெற, காங்கிரசின் ஆதரவை கேட்கும்படி, கருணாநிதிக்கு கனிமொழி, 'பிரஷர்' கொடுக்க திட்டமிட்டுள்ளார்.எப்படி ஸ்டாலின் பரிந்துரையை புறந்தள்ளி விட்டு, தன் ஆதரவாளருக்கு, 'சீட்' வாங்கி கொடுத்தாரோ, அதேபோல், காங்கிரசின் ஆதர வையும் அவர் பெற்றுத் தந்து விடுவார்.அப்படி ஆதரவு அளிக்க முன்வரும்போது, மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என்ற, நிபந்தனையை இந்த முறை, காங்கிரஸ் மேலிடம் நிச்சயம் முன்வைக்கும். கனிமொழி வற்புறுத்தல் காரணமாக, அதையும் கருணாநிதி ஏற்பார்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கனிமொழியின் இந்த பிளான் தெரிந்து, ஸ்டாலின் கடும் கோபம் அடைந்துள்ளார். இதை முறியடிக்க, அவரும் காய் நகர்த்தி வருகிறார் என்கிறது, அவரது ஆதரவாளர் வட்டாரம்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE