கூட்டணிக்குள் வர, தே.மு.தி.க., முரண்டு பிடிப்பதால், அதற்கு மாற்றாக, பா.ம.க.,வை கூட்டணிக்குள் இழுக்க, தி.மு.க., தலைமை காய் நகர்த்த துவங்கி உள்ளது. இது, தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வைதங்கள் கூட்டணியில் இணைக்க வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புகிறது. இதற்காக, துாதர்கள் சந்திப்பு, திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், கடைசி வரையில், விஜயகாந்த் பிடி கொடுக்க மறுத்து வருகிறார்.
ரகசிய பேச்சுவார்த்தை:
'உளுந்துார்பேட்டையில், பிப்., 2ம் தேதி நடக்கும் மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்' என்பது விஜயகாந்த் நிலைப்பாடு. அதே நேரத்தில், அந்த மாநாட்டுக்கு, 'ஊழல் எதிர்ப்பு மாநாடு' என, பெயரிட்டது, தி.மு.க.,வுக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் வெளிப்பாடே, ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., சார்பில் திருச்சி சிவா களம் இறக்கப்பட்டது. எனவே, தே.மு.தி.க.,விற்கு மாற்றாக, பா.ம.க.,வை கூட்டணிக்குள் இழுக்க, தி.மு.க., தலைமை காய் நகர்த்த துவங்கி உள்ளது. தி.மு.க.,வில் உள்ள வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த, 'மாஜி' அமைச்சர்கள் மூலம், ரகசிய பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. பா.ம.க., தரப்பில், அக்கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 'அன்புமணிக்கு, ராஜ்யசபா எம்.பி., 'சீட்' கொடுத்தால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கூட்டணிக்கு சம்மதிப்பார்' என, அவர்கள் கூறி வருகின்றனர்.நிலைமை இப்படி இருக்க, தி.மு.க.,வுக்கு எதிராக, ராமதாஸ் தெரிவித்துள்ள காரசாரமான கருத்து, புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'பா.ம.க.,வின் எழுச்சியை தடுக்க, தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வன்முறையை துாண்டுகின்றன' என, தெரிவித்து இருந்தார்.ஆனால், 'கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இது சிக்கலை ஏற்படுத்தாது' என்றே, பா.ம.க., நிர்வாகிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
இதுகுறித்து, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கடந்த தி.மு.க., ஆட்சியில், கூட்டணியில் இருந்து கொண்டே, அரசின் நடவடிக்கைகளை, ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால், விழுப்புரத்தில், ராமதாஸ் கைது செய்யப்பட்ட போது, முதல் ஆளாக, கருணாநிதி தான் குரல் கொடுத்தார். இப்போதும், தி.மு.க.,வினரை, ராமதாஸ் கண்டித்துள்ளார். அதனால், விமர்சனங்களையெல்லாம் கருணாநிதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்' என்றார்.
இதனிடையே, பா.ம.க.,வுடன் தி.மு.க., ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவது, வி.சி., கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தனியார் 'டிவி'க்கு பேட்டிளித்த வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்,'தேர்தலுக்கு நாட்கள் உள்ளதால், பா.ஜ., அல்லது பா.ம.க.,வுடன் தி.மு.க., கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால், அதில் வி.சி., இடம் பெறாது' எனக் கூறியுள்ளார்.
கழற்றிவிட வாய்ப்பு:
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைய, பா.ம.க., முரண்டு பிடித்து வந்தது. கடைசியாக, பா.ம.க., கேட்டதை கொடுக்க, தி.மு.க., முன்வந்தது. குடும்ப திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுக்க சென்ற ராமதாஸ், கருணாநிதியுடன் கூட்டணியை முடித்துக்கொண்டு திரும்பினார்.அதேபோன்று, இம்முறையும் கூட்டணி அமைந்தால், சமுதாய கூட்டணியை, ராமதாஸ் கழற்றிவிடவும் வாய்ப்புள்ளது என, பா.ம.க., எதிர்ப்பு அணியில் உள்ள வன்னியர் அமைப்புகளின் நிர்வாகிகள், கூறி வருகின்றனர்.இதனால், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி அமையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதே நிலை நீடித்து, தேர்தல் அறிவிப்பும் வந்து விட்டால், சிக்கல் பெரிதாகும் என, தி.மு.க., தலைமை யோசிக்க ஆரம்பித்துள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE