"எங்களை ஏமாற்றியவர்களுக்கு நெருக்கடி கொடுப்போம்' : மாநில கட்சிகளால் காயம்பட்ட கள் இயக்கத்தினர் கொதிப்பு

Added : ஜன 20, 2014
Share
Advertisement
உடலுக்கு கேடு விளைவிக்காத, "கள்' விற்பனையை, "சப்பை' காரணங்களுக்காக தமிழக அரசு தடை செய்துள்ளது. இதை அனுமதிப்பதன் மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர் என்ற நோக்கத்தோடு, கள் இயக்கத்தினர், 2005 முதல் போராடி வருகின்றனர். தற்போதைய, முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல்வாதிகள், இவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதாக
"எங்களை ஏமாற்றியவர்களுக்கு நெருக்கடி கொடுப்போம்' : மாநில கட்சிகளால் காயம்பட்ட கள் இயக்கத்தினர் கொதிப்பு

உடலுக்கு கேடு விளைவிக்காத, "கள்' விற்பனையை, "சப்பை' காரணங்களுக்காக தமிழக அரசு தடை செய்துள்ளது. இதை அனுமதிப்பதன் மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர் என்ற நோக்கத்தோடு, கள் இயக்கத்தினர், 2005 முதல் போராடி வருகின்றனர். தற்போதைய, முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல்வாதிகள், இவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, "பல்டி' யடித்து உள்ளனர். இதனால், விரக்தியடைந்து உள்ள இந்த இயக்கத்தினர், அரசியலில் குதிக்க முடிவெடுத்து உள்ளனர்.
அது குறித்து, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர், நல்லசாமி, "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

கள் என்ற பானம் எந்த வகையில் நல்லது?

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு பானம் உண்டு. தமிழக மண்ணில் பனை, தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் இருந்து கிடைக்கும் கள், கோவாவில் முந்திரியில் தயாரிக்கப்படும் பென்னி, சீனாவில் அரிசியில் தயாரிக்கப்படும், "மவுத்தாய்' ரஷ்யாவில் உருளை கிழங்கில் தயாராகும், "ஓட்கா' ஆகியவற்றுக்கு இணையாக சிறந்தது. விவசாயிகளுக்கு சிறந்த வருவாய் தரும். கள்ளில், தாய்ப்பாலுக்கு அடுத்தபடியான, "லோரிக் ஆசிட்' உள்ளது. அவ்வையார், நலங்கிள்ளி காலம் தொட்டே, தமிழ் மக்களின் உணவின் ஒரு பாகமாக, கள் இருந்து உள்ளது.

தமிழகத்தில், கள் தடை செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?

கடந்த, 1987ல் பாக்கெட் சாராயம், கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. 2005ல் தகவல் உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், கள்ளுக்கு தடை விதிக்க காரணம் கேட்டு, இயக்கம் கோரியது.
தகவல் ஆணையம் பதிலில், "டாஸ்மாக்' கடைகளுக்கு சரக்கு கொடுக்க, ஏழு பெரிய நிறுவனங்கள் உள்ளன. பாதிப்பு ஏற்பட்டால், அந்நிறுவனங்கள் பொறுப்பு. அதே சமயம், மாநிலத்தில், பல லட்சம் பேர் கள்ளை இறக்குவதுடன், சிலர் போதைக்காக," குரோம் நைட்ரேட்'டை சேர்க்கின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, கண்டுபிடிக்கவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது சிரமம் என, பதில் கொடுத்தனர்.
இந்த பதில் வெறும் சப்பைக்கட்டு. கேரளாவில் கூட, கள் விற்பனை எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து வருகிறது. பால் முதல், அனைத்து உணவுப்பொருட்களிலும் கலப்படம் இருக்கத் தான் செய்கிறது. அதற்காக அவற்றை தடை செய்ய முடியுமா? கலப்படத்தை அரசு தான் தடுக்க வேண்டும்.

இந்த இயக்கத்தின் கோரிக்கைக்கு அரசியல் ஆதரவு எந்தளவுக்கு உள்ளது?

கள் இயக்கத்துக்கு, ம.தி.மு.க., -- பா.ஜ., - சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு கொடுத்து, போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளன. கடந்த, 2009ல், பரமக்குடி தேர்தல் பிரசாரம்; 2011ல், பொள்ளாச்சி கூட்டத்தில் பேசிய போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கள்ளுக்கு ஆதரவு தெரிவித்து, வாய்வழி வாக்குறுதி வழங்கினார். கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், "கள் விற்போம்' எனக் கூறியதை அடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கள்ளுக்கு ஆதரவு தெரிவித்து, கொடுத்த வாக்குறுதி
காற்றோடு போய்விட்டது.

உங்கள் போராட்டம் கூட முடங்கி உள்ளதே...

தங்கள் உரிமைக்காக போராட நினைப்பவர்கள், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்த முயல்கின்றனர். அரசின் உத்தரவால், போலீசார் அனுமதி மறுக்கின்றனர்; நீதிமன்றத்தின் பதிலுக்காக
காத்திருக்கிறோம். அறவழியில் போராடும் எங்களுக்கு, அனுமதி வழங்கினால், சென்னையில் விரைவில், ஒரு லட்சம் பேரைக் கூட்டி போராட்டம் நடத்த உள்ளோம். கள்ளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.

லோக்சபா தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன?

தேர்தல் அறிவிப்பு வெளிவரட்டும். இந்த தேர்தலில் எங்களை ஏமாற்றியவர்களுக்கு, நெருக்கடி கொடுக்கப் போகிறோம். இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு, எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
தேசிய கட்சிகளால், மாநிலத்தில் விதித்ததடையை விலக்க முடியாது. ஆனால், லோக்சபா தேர்தல் வெற்றி மூலம், அடுத்த சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கப்பெறும், என்பதை மறக்க வேண்டாம்.எங்களுக்கு எதிராகச் செயல்பட்ட, தங்கபாலுவை தோற்கடித்ததை, மற்றவர்கள் மறக்க வேண்டாம்.

கள் இயக்கத்தினரும் அரசியலில் குதிக்க திட்டம் உள்ளதா?

தமிழகத்தின், 39 தொகுதிக்கும் எங்களின் வேட்பாளர்கள் உள்ளனர். கட்சிகளின் கூட்டணி, எங்களின் கோரிக்கை, அவர்களின் வாக்குறுதியை அடுத்து, வேட்பாளர் நிறுத்தம் அறிவிக்கப்படும்.
எங்களுக்கு எதிராக பேசும் அரசியல் கட்சிகள், வெளிநாட்டு பானம் தயாரிப்பவர்கள், "கள் உகந்த பானம் அல்ல' என்பதை, விவாதத்தின் மூலம் நிரூபித்தால், 10 கோடி ரூபாய் பரிசை வழங்குவதுடன், இயக்கத்தை கைவிடவும் தயாராக உள்ளோம்.
அதே சமயம், அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பாக, கள்ளை தடை செய்துள்ளனர் என்ற எங்கள் கோரிக்கையை வெளிக்கொண்டு வர, அனுமதியுங்கள். தலைநகரில், ஒரு லட்சம் விவசாயிகளை கூட்டிக் காட்டுகிறோம். மக்களின் ஆதரவைப் பார்த்து, கள்ளுக்கு அனுமதியை அரசு கொடுக்கட்டும். அதுவரை போராட தயாராக உள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X