மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாமா?| Dinamalar

மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாமா?

Added : ஜன 20, 2014 | கருத்துகள் (6) | |
டில்லியில் சமீபத்தில் நடந்த, காங்., மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், "நரேந்திர மோடி டீ கடை வைத்திருந்தவர். அவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட வேண்டாம். தேவையானால், இங்கு வந்து டீ சப்ளை செய்யலாம்' என, தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் அலுவலகங்கள் முன், டீ குடிக்கும் போராட்டங்களை, பா.ஜ.,வினர் நடத்துகின்றனர். "தேர்தல் களத்தில்,
மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாமா?

டில்லியில் சமீபத்தில் நடந்த, காங்., மாநாட்டில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், "நரேந்திர மோடி டீ கடை வைத்திருந்தவர். அவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட வேண்டாம். தேவையானால், இங்கு வந்து டீ சப்ளை செய்யலாம்' என, தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் அலுவலகங்கள் முன், டீ குடிக்கும் போராட்டங்களை, பா.ஜ.,வினர் நடத்துகின்றனர். "தேர்தல் களத்தில், அரசியல் கட்சித் தலைவர்களின் நிதானமற்ற பேச்சால் தேவையற்ற பிரச்னைகள் எழுகின்றன' என, ஆதங்கப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க நிர்வாகிகளின் கருத்துக்கள் இதோ:

காங்கிரஸ் பாரம்பரிய மிக்க கட்சி. காந்தி, நேரு, ராஜாஜி போன்ற பல தலைவர்களை நாட்டுக்கு தந்துள்ளது. அவர்கள் மீது மக்களுக்கு பெரும் மரியாதை இருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலை வராக இருந்த, காமராஜருக்கு பெரிய தகுதிகள் எதுவும் இல்லை. ஆனால், மக்கள், அவர் மீது அளப்பரிய அன்பை வைத்திருந்தனர். ஆனால், அவரை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற எண்ணம், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. சாதாரண டீ கடை வைத்திருந்த அவரின் உழைப்பும், குஜராத்தில் வளர்ச்சியை சாதித்துக் காட்டிய விதமும் தான் காரணம். மேலும், அண்மை காலங்களில், நாட்டின் பிற தலைவர்களுக்குக் கிடைக்காத ஒரு வரவேற்பு, நாடு தழுவிய அளவில் மோடிக்கு கிடைத்திருக்கிறது.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, நம் பகுதிக்கும் கிடைக்காதா என்ற ஏக்கம், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த தன்னெழுச்சியான ஆதரவு, வரும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கப் போகிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத, காங்கிரஸ் தலைவர்கள், கீழ்த்தரமான விமர்சனங்களை, மோடி மீது பாய்ச்சுகின்றனர். மக்கள் யாரை பிரதமராக ஏற்கின்றனரோ, அவரை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாட்டின் வளர்ச்சி,ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க வேண்டுமே தவிர,
தனிநபர் விமர்சனம் கூடாது. அரசியலுக்காக, தனிமனித நிந்தனைகள், யாருக்கும் எந்த பயனையும் ஏற்படுத்தாது. தேவையற்ற விரோதங்களையே வளர்க்கும். எனவே இனியாவது, நாட்டின் ஒற்றுமைக்கு தேவையான கருத்துக் களை மக்களிடம் கொண்டு செல்வதை, காங்கிரஸ் தலைவர்கள் பின்பற்ற வேண்டும்.

வேதாந்தம், செயல் தலைவர், விஸ்வ ஹிந்து பரிஷத்

காங்கிரசுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி விழுகிறது. அந்த பதற்றத்தில், நிதானமற்ற பேச்சுக்களை பேசுகின்றனர். இதேபோல், டில்லி சட்டசபை தேர்தலில், வெற்றியைப் பறித்த, "ஆம் ஆத்மி' கட்சி
மீது, பா.ஜ.,வின் கோபம் திரும்பியுள்ளது. இதன் வெளிப்பாடு, அக்கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடந்தது.
இரு கட்சிகளும், எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற நோக்கில், ஒருவரை ஒருவர் கீழ்தரமாக விமர்சித்துக் கொள்கின்றனர். இதனால், ஆண்டாண்டு காலமாக, கடைபிடித்து வரும், மேடை நாகரிகத்தை குழிதோண்டி புதைக்கின்றனர்.""சோனியா பிரதமரானால், மொட்டை அடித்துக் கொள்வேன்,'' என்று, சொன்னவர், தற்போதைய லோக்சபா பா.ஜ., எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ். இப்போது, "மோடி, டீ கடை வைக்க, இடம் தருகிறோம்' என, காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் பேசுகிறார்.தேர்தலில், ஒரு கட்சியின் பொருளாதார கொள்கை, அதன் கடந்த கால சாதனைகள், எதிர்காலத்தில் செய்ய நினைக்கும் திட்டங்களை முன் வைத்து பிரசாரம் செய்வது தான் மேம்பட்ட செயல்.எதிர்க்கட்சியின் தவறான கொள்கை களை விமர்சிக்கலாம். தனி மனிதர் களையும், அவர்களின் சொந்த வாழ்க்கை யையும் விமர்சிப்பது நியாயமற்றது. ஆனால், பா.ஜ.,வும், காங்கிரசும் மாறி, மாறி இதுபோன்ற பிரசாரங் களைச் செய்து வருகின்றன. இதன்மூலம், நாட்டின் முக்கியமான பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்பி விடலாம் என, முயற்சிக்கின்றனர். திட்டமிட்டு இதுபோன்ற பிரசாரங் களை செய்கின்றனர். இதை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.தங்களின் முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவு என, முடிவெடுக்க வேண்டும். அப்போது, இதுபோன்ற தரமற்ற விமர்சனங்கள் அதுவாகவே அரசியலிலிருந்து வெளியேறிவிடும்.

தமிழ்செல்வன், தலைவர், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X