அரசியல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்த பிரியங்கா, சமீபத்தில் காங்., மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். பிரியங்காவை முன்னிலைப்படுத்த அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதிலிருந்து தீவிர அரசியலில் பிரியங்கா ஈடுபட தயாராகி விட்டார் எனத் தெரிகிறது.
தொடர்ச்சியான பத்தாண்டு கால காங்., ஆட்சியில் அதிருப்தியே மிஞ்சுகிறது. சட்டசபை தேர்தல்களில், காங்., மண்ணைக் கவ்வியது. இதனால் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச வேண்டியுள்ளது. கட்சியில் நட்சத்திர அந்தஸ்தில் வலம் வருபவர் பிரியங்கா. அவரை முன்னிலைப்படுத்தினால் கட்சியின் மீது ஒரு புதிய பார்வை உண்டாகும். மதிப்புகூடும் என காங்., கருதுகிறது. லோக்சபா தேர்தலில் போட்டியிட பிரியங்கா விரும்பவில்லை என்றே தெரிகிறது. எனவே பெரிய பதவி அளித்து, பிரசாரத்தில் ஈடுபட வைக்க திட்டமிட்டுள்ளனர்.
பெண்களைச் சமாதானப்படுத்த:
பிரியங்கா பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் ராகுல் இல்லை. சோனியா, அகமது படேல் மற்றும் ஜனார்த்தன் திரிவேதி ஆகியோர் பங்கேற்றனர். ஊழல், விலைவாசி உயர்வு மற்றும் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என விவாதிக்கப்பட்டது. சமையல் கேஸ் விலை உயர்வால் பெண்கள் கொதிப்படைந்துள்ளனர். பெண்களை சமாதனப்படுத்த, பிரியங்காவை அஸ்திரமாக உபயோகிக்கலாம் என தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாகவே மானிய விலை சிலிண்டரை ஆண்டுக்கு 9லிருந்து 12ஆக உயர்த்தினர்.
பல பிரச்னைகளில் சிக்கியுள்ள காங்., கட்சிக்கு ஒரு புதிய விடிவு தேவைப்படுகிறது. புதுவரவான ஆம் ஆத்மி கட்சி காங்.,குக்கு தலைவலியை உண்டாக்குகிறது. அக்கட்சியின் புதிய நட்சத்திரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர். எனவே காங்.,கின் தலைவர்கள் பலர் பிரியங்கா தீவிர அரசியலுக்கு வருவதை விரும்புகின்றனர். சோனியாவின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டும் அடுத்த பெண் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அடுத்த வாரிசு?:
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தன் கணவரை மீது குறைகூறுவதை தடுக்கவும், பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரவேண்டியிருக்கிறது. மற்றொரு மறைமுகமான காரணமும் கூறப்படுகிறது. ராகுல் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பிரியங்காவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேரு குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசுகள் அவர்கள் தான். பிரியங்காவை முன்னிலைப்படுத்தினால் தான், அவரது குழந்தைகளை கட்சிக்குள் நுழைத்து, தலைமை பொறுப்புக்கு கொண்டு வர முடியும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ கூடிய விரைவில் பிரியங்கா தீவிர அரசியலுக்குள் குதித்து, வாரிசு அரசியலை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE