அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தும், அசராத விஜயகாந்தை, கூட்டணிக்கு இழுக்க, அடுத்த அஸ்திரத்தை பிரயோகிக்க முடிவு செய்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அதன்படி, விஜயகாந்தின் கோபத்தை தணிக்க, அவரை சந்தித்துப் பேசும்படி, மூத்த மகன் அழகிரிக்கு ஆலோசனை கூறியுள்ளார். அவரின் யோசனைப்படி, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள, விஜயகாந்தும், அழகிரியும் சந்தித்துப் பேசலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாகரிகம் தெரியாது:
லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை எப்படியும் சேர்த்து விட வேண்டும் என்பதில், கருணாநிதி உட்பட, அந்தக் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் தீவிரமாக உள்ளனர். அதனால், தி.மு.க., தரப்பில், சிலர் தூதர்களாக சென்று, விஜயகாந்திடம் பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, விஜயகாந்த் தரப்பில், எந்த விதமான உறுதியான மற்றும் நம்பகமான பதில்கள் தரப்படவில்லை. இதற்கிடையில், சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த, தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலர், அழகிரி, 'விஜயகாந்திற்கு அரசியல் நாகரிகம் தெரியாது. அதனால், தே.மு.தி.க., உடன் கூட்டணி தேவையில்லை' எனக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால், கூட்டணி அமைப்பதற்கு ஆபத்து வந்து விடுமோ என, பயந்த கருணாநிதி, அழகிரியை அழைத்து, 'வாயை வைத்துக் கொண்டு, சும்மா இருக்க மாட்டாயா' என, கண்டித்தார்; அமைதியாக இருக்கும்படியும் வலியுறுத்தினார்.அதேநேரத்தில், அழகிரியின் பேட்டியை சாதகமாக்கிய, பா.ஜ., தலைமை, தே.மு.தி.க.,வுடன் தொடர்ந்து, கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர், கூறியுள்ளனர்.
இந்த விவகாரங்களால், அதிர்ந்து போன கருணாநிதி, 'அரசனை நம்பி, புருஷனை கைவிட்ட கதையாக, விஜயகாந்த் வருவார் என நம்பி, காங்கிரசையும் கழற்றி விட்டு விட்டோம். தே.மு.தி.க., வராவிட்டால், லோக்சபா தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படும்' என, நினைத்தார்.அதனால், சமீபத்தில், தன்னை சந்தித்த, மூத்த மகன் அழகிரியிடம், 'விஜயகாந்தை சந்தித்துப் பேசு; இருவரும் சமாதானமாகுங்கள். அப்போதுதான் கூட்டணி உறுதியாகும்' என, ஆலோசனை கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தன் மகன் சவுந்திர பாண்டியன் நடிக்கும், 'சகாப்தம்' படத்திற்கான நடிகையை தேர்வு செய்ய, விஜயகாந்த் மலேசியா சென்றுள்ளார். அங்கு, மதுரையை சேர்ந்த, தற்போது மலேசியாவில் வசிக்கும், முஸ்லிம் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார்.அங்கு அவரை, தி.மு.க.,வை சேர்ந்த, முக்கிய புள்ளிகள் இருவர், சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் பிடிகொடுத்து பேசாத விஜயகாந்த், 'என் மகன் நடிக்கும் படத்திற்கு, கதாநாயகி தேடுவது தொடர்பான வேலைகள் முடியட்டும்; பின் பேசிக் கொள்ளலாம்' எனக்கூறி, அவர்களை அனுப்பி விட்டார்.
கூட்டணியில் சேர:
அத்துடன், மலேசியாவில் தங்கியுள்ள விஜயகாந்த், அங்கு நண்பர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த, நிர்வாகிகள் இருவர் சந்தித்துள்ளனர். அப்போதும், தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என, அவரை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.இதற்கிடையில், தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலர், அழகிரியும், நேற்று அதிகாலை, பாங்காக் புறப்பட்டுச் சென்றார். வரும் 23ம் தேதி, அவர், சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, மலேசியாவில் இருக்கும் விஜயகாந்தை, தந்தை கருணாநிதியின் ஆலோசனைப்படி, அழகிரிசந்தித்துப் பேசலாம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE