தமிழகத்தில், கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜ., இன்று துவங்குகிறது. இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன், பா.ஜ., மூவர் குழுவினர் பேச்சு நடத்துகின்றனர்.
தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் ம.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர் ராவை, சென்னை வருமாறு, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்துள்ளார். அனேகமாக அவர், 23ம் தேதி சென்னை வருவார் என, அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.
சிறிய கட்சிகளுடன்:
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், தேசிய ஜன நாயக கூட்டணியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், இன்று முதல் வேகம் பெறுகின்றன. தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன், ஐ.ஜே.கே., கொ.ம.தே.க., ஆகிய சிறிய கட்சிகளையும் சேர்த்து, தே.ஜ., கூட்டணியை உருவாக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுளளது.
மூவர் குழு அமைப்பு:
இக்கட்சிகளுடன் பேச்சு நடத்த, பா.ஜ.,வில், மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாநிலத் தலைவர், கே.என்.லட்சுமணன், பொதுச் செயலர் சரவண பெருமாள், துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர், இன்று, முதல் கட்டமாக, சிறிய கட்சிகளுடன் பேச்சு நடத்துகின்றனர். ஐ.ஜே.கே., மற்றும் கொ.ம.தே.க., தலைவர்களை சந்தித்துப் பேசுகின்றனர். அடுத்ததாக, ம.தி.மு.க., - பா.ம.க., தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன், பா.ஜ., மேலிடத்தின் சார்பில், முரளீதர் ராவ், சென்னை வந்து, இக்கட்சித் தலைவர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற, பொன்.ராதாகிருஷ்ணன், முரளீதர் ராவுடன், நேற்று சென்னை வருவார் என, கூறப்பட்டது. அதற்காக, பொன்.ராதாகிருஷ்ணன், டில்லியில் நேற்று தங்கியிருந்தார். ஆனால், முரளீதர் ராவ் பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவரது சென்னை வருகை தள்ளி போடப்பட்டுள்ளது.
பேச்சு துவங்குகிறது:
இதுகுறித்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: முரளீதர் ராவ் தாய் மறைவை ஒட்டி நடக்கும், 'திதி'யில் அவர் கலந்து கொள்ள, சொந்த மாநிலம் செல்கிறார். அந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடக்கிறது. அதை முடித்து, தமிழகம் வருவதாகக் கூறியிருக்கிறார். அதற்கு முன், எங்கள் கட்சி சார்பில், அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவினர், கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்க உள்ளனர். விஜயகாந்த், ராமதாஸ், வைகோவை சந்திக்க, முரளீதர் ராவ், 23ம் தேதிக்கு பின், சென்னை வருவார். எனினும், 25ம் தேதிக்குள் இந்த சந்திப்புகள் முடிக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், மலேசியா சென்றுள்ள, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 23ம் தேதி தான், சென்னை திரும்புகிறார். அதையொட்டியே, முரளீதர் ராவ் வருகையும் அமையும் என, பா.ஜ., வட்டாரம் மேலும் தெரிவித்தது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE