தி.மு.க., கூட்டணிக்கு பா.ம.க., வரலாம்; அது தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என, தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் படுதோல்வி அடைந்தன, அதனால், இந்தக் கூட்டணியை, 'பொருந்தா கூட்டணி' என, சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில், ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் இருக்க, புதிதாக பா.ம.க.,வும் இடம் பெறுமானால், நிலைமை என்ன ஆகும் என்பன குறித்து, இரு அரசியல் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள் இதோ:
பா.ம.க., - பா.ஜ., கட்சிகள் இருக்கும் அணியில், விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது என்பதில் உறுதியாக உள்ளோம். 'தேசிய கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன், எந்த காலத்திலும், இனி கூட்டணி அமைக்க மாட்டோம்' என, வீரமாகப் பேசிய, பா.ம.க.,வினர், தற்போது திரைமறைவில், பா.ஜ.,வுடன் பேரம் பேசி வருகின்றனர். இது, அவர்களின் சொந்த ஜாதியினரையும், மக்களையும் ஏமாற்றும் செயல். பா.ஜ.,விடம் பேரம் படியாத நிலையில், தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வாய்ப்பு கொள்வது என்ற பகீரத முயற்சியையும், பா.ம.க., வினர் மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'பா.ஜ.,வுடன் பேரத்தை வலிமைப்படுத்திக் கொள்ள, தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்' என்ற, ஒரு மாயையை, பா.ம.க.,வினர் உருவாக்குகின்றனர். தர்மபுரி கலவரத்தை தொடர்ந்து, வட மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், அம்பேத்கர் சிலையை உடைத்ததோடு, 100 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொடி கம்பங்களையும், பா.ம.க.,வினர் வெட்டி சாய்த்தனர். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த, இரண்டு மூன்று பேரை எம்.பி., ஆக்குவதற்கு அப்பாவி இளைஞர்களை, கிரிமினல் குற்றவாளிகளாக, பா.ம.க.,வினர் உருவாக்குகின்றனர். இதை, வன்னியர் சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து ஜாதி தலைவர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்தளித்து, அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வதன் மூலம், பா.ஜ., கூட்டணியில், கூடுதல் தொகுதிகளைப் பெற, பா.ம.க., முயற்சிக்கிறது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும் தி.மு.க., - அ.தி.மு.க., வலிமையாக இருப்பது போல், விடுதலை சிறுத்தைகளுக்கும், கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, தி.மு.க., பாடுபட்டு வருகிறது. எனவே, தி.மு.க., அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது வலிமையாக இருக்கும். தி.மு.க., என்பது தமிழர்களுக்காக உள்ள கட்சி. தமிழக மக்களுக்காக உள்ள கட்சி. அதில், எல்லா ஜாதியினரும் உள்ளனர். அனைத்து ஜாதிகளையும், தி.மு.க., தலைவர், கருணாநிதி ஆதரிப்பதால் தான், அவரது தலைமையில், தமிழகத்தில், ஐந்து முறை தி.மு.க., ஆட்சி அமைந்தது. அனைத்து ஜாதி மக்களையும், தலைவர்களையும் அரவணைத்து செல்லும் பக்குவம் வாய்ந்த ஒரே தலைவர் கருணாநிதி தான். தி.மு.க., இன்று வலிமையாக இருக்கிறது. மற்ற கட்சிகள் தி.மு.க., உடன் கூட்டணி வைக்க விரும்பினால், தலைமை கழகம் பரிசீலிக்கும். மற்ற கட்சிகள் வந்தால் தான், வெற்றி பெற முடியும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொரு தேர்தலுக்கும், வெவ்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணிகள் அமைக்கின்றன. அந்த தேர்தல் கூட்டணிகள், தற்போது அமைய வேண்டும் என, எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க.,வின் வெற்றி குறித்து, கருணாநிதி, ஸ்டாலின் வியூகம் அமைத்துள்ளனர். தேர்தலில் எப்படி கூட்டணி அமைக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற உத்தியை, தலைமை கழகம் எடுக்கும். குறிப்பிட்ட மக்களை தங்கள் ஓட்டு வங்கியாக வைத்திருக்கும் எந்த கட்சியாக இருந்தாலும், அவர்களை கூட்டணியாக வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பதில் தவறில்லை. அந்த அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும், அனைத்து கட்சிகளும் பலம் வாய்ந்தவை தான். இதே மாதிரி இருக்கும் மற்ற கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றால், தி.மு.க.,வுக்கு வலிமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர், தி.மு.க.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE