தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, ஆறு பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம், 7ம் தேதி நடக்கிறது. இதற்கு வசதியாக, தமிழக சட்டசபையின், இந்த ஆண்டின் முதற்கூட்டம், வரும், 30ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. ஒரு வாரம் நடக்கும் இந்த கூட்டத்தின், இறுதி நாளில், ராஜ்யசபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபையில், அதிக பலம் கொண்ட, அ.தி.மு.க., இன்னும் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. ஆனாலும், ஐந்து பேரை எளிதாக வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு, அதிக எண்ணிக்கையில், எம்.எல்.ஏ.,க்களை, கையில் வைத்துள்ளது.அதேநேரத்தில், வெற்றி பெற, பிற கட்சிகளின் ஆதரவு அவசியம் என்ற நிலையில் உள்ள தி.மு.க., அதிரடியாக, களத்தில் குதித்துள்ளது. தி.மு.க., வேட்பாளராக, திருச்சி சிவா அறிவிக்கப்பட்டு, அவரும் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.வெற்றி பெற போதுமானதல்லதற்போதைய நிலவரப்படி, அக்கட்சிக்கு, சட்டசபையில், 23 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள, மனித நேய மக்கள் கட்சிக்கு, 2 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். புதிய தமிழகம் கட்சிக்கு, 2 பேர் உள்ளனர். ஆனால், அந்த இரண்டு பேரில், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி, அதிருப்தியாளராக மாறியுள்ளார். அதனால், தி.மு.க., வேட்பாளருக்கு, 26 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைப்பது உறுதியாகி உள்ளது. வெற்றி பெற இந்த ஆதரவுபோதுமானதல்ல. காங்கிரசின் ஆதரவு அவசியம் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.
ஆனால், காங்கிரசின் ஆதரவை கோருவதில், தி.மு.க.,வுக்கு சிக்கல் வந்துள்ளது.காரணம், ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு கேட்டால், லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாகி விடும். லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டு சேர்வதை விரும்பாமல் தான், தி.மு.க., தனி கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.இப்படியொரு குழப்பம் இருப்பதால், காங்கிரசின் ஆதரவைபெறாமல், திருச்சி சிவாவை வெற்றிபெற வைக்க வேண்டும் என,தி.மு.க., நினைக்கிறது. அதுபற்றிஆலோசிப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. அதில், ராஜ்யசபா தேர்தல் பற்றி முக்கிய விவாதம் நடந்துள்ளது.இன்னும் மூன்று எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டி விட்டால் போதும், தி.மு.க., வேட்பாளரை வெற்றி பெறச் செய்து விடலாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கணக்கு போடுகிறார். அந்த மூன்று பேர் யார்? அவர்களை எப்படி இழுப்பது என்பது குறித்தெல்லாம், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.பின், இந்த பொறுப்பை மேற்கொள்வதற்காக, ஐந்து பேர் குழு, அமைக்கப்பட்டுள்ளதாக, அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது. அந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், ஜெ.அன்பழகன், சக்கரபாணி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இலக்கை எட்டி விடும்?
இதுகுறித்து, அறிவாலய வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:காங்கிரஸ் ஆதரவு என்பது கடைசி ஆயுதம் என, கருணாநிதி கருதுகிறார். அது இல்லாமல், திருச்சி சிவாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என, விரும்புகிறார். எந்த கட்சியில் இருந்து, அந்த மூன்று பேரை அழைத்து வருவது என்பது குறித்து, ஆராயப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, நிலக்கோட்டை எம்.எல்.ஏ.,வின் ஆதரவை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வில் இருந்த ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தியாளர்கள் என்ற பெயரில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்கள் மீது, தி.மு.க.,வின் பார்வை திரும்பி உள்ளது. அதேபோல், தே.மு.தி.க.,வை சேர்ந்த, 21 எம்.எல்.ஏ.,க்களிலும் சிலர் நெருக்கடியில் உள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, ஆதரவு திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு முட்டுக்கட்டை விழுந்து, இழுப்பு முயற்சி வெற்றி பெறாமல் போனால், கடைசியில் காங்கிரசின் ஆதரவோடு, தி.மு.க., வெற்றி இலக்கை எட்டி விடும்.இவ்வாறு, அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
நமது சிறப்பு நிருபர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE