கோவை: கொங்கு மண்டல தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்கு செல்ல உள்ளன. தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல் தான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளது.
1,400 ஏக்கரில்...:
தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20ம் தேதி 'சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு' நடத்தப்பட்டது. கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்த மாநாட்டில், கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தொழில் துறை அமைச்சர் மற்றும் அந்த மாநில அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்று, தொழில்அதிபர்களுக்கு பல்வேறு கவர்ச்சி ஆன வாக்குறுதிகளை அளித்து உள்ளனர். மாநாட்டில் பேசிய சித்தராமய்யா, ''கர்நாடகாவில் தொழில் துவங்க வாருங்கள். அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்,'' என, தமிழக தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார். இந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் தொழில் நடத்தும், எறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராஜ் நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்து உள்ளனர்.
இது குறித்து, கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின், உதவி செயலாளர், விஜயகுமார் கூறுகையில், ''கோவையில் நடத்தப்பட்ட மாநாடு, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு, சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்ய முன் வந்திருப்பது, பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது,'' என்றார்.
மேலும், ''குறிப்பாக, திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. கோவையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்த தொழில் மண்டலத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் தொழில் செய்ய முன் வந்துள்ள அனைவருக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, தொழில் மேம்பாட்டுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வோம்,'' என்றார்.
இது குறித்து, தொழில் முனைவோர் சிலர் கூறுகையில், 'யாரும் இங்கிருந்து தொழிலை அங்கு இடம் மாற்றவில்லை. தங்கள் தொழிலை அங்கு விரிவாக்கம் செய்கின்றனர். கிரானைட் பாலிஷிங் தொழிலுக்கு, கர்நாடகா மாநிலம் சிறப்பான இடம். அதே போல், உணவு பதப்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தி போன்ற தொழில்களை அங்கே விரிவாக்கம் செய்ய, நல்ல வாய்ப்பு உள்ளது. மற்றபடி, அங்கு செய்யப்படும் முதலீட்டால், கோவைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை' என்கின்றனர்.
உள்கட்டமைப்பு பற்றாகுறை:
இவை கூடுதல் முதலீடுகள் என்றாலும், தமிழகத்திற்கு இவை கிடைத்திருந்தால், இங்கு வேலை வாய்ப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு, அரசு நிர்வாக கோளாறு, உள்கட்டமைப்பு பற்றாகுறை, ஆட்சியாளர்களை சந்திக்க முடியாத சூழல் உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டு மூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்பதே உண்மை.இதனால், தமிழக தொழில் முனைவோர், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். சாம்ராஜ் நகர் முதலீட்டாளர் மாநாடு, கொங்கு மண்டல தொழில் வரலாற்றில் ஒரு குறிக்கப்பட வேண்டிய சகாப்தமாக மாறலாம் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE