மோடி - விஜயகாந்த் படம்: தி.மு.க., அப்செட்| DMK upset over Modi-vijayakanth picture | Dinamalar

மோடி - விஜயகாந்த் படம்: தி.மு.க., 'அப்செட்'

Updated : ஜன 22, 2014 | Added : ஜன 22, 2014 | கருத்துகள் (54) | |
பிரபல சமூக வலைதளத்தில் உள்ள, தே.மு.தி.க.,வின் வலைப்பக்கத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், விஜயகாந்தும் சந்தித்துப் பேசிய படம் வெளியிடப்பட்டிருப்பது, தி.மு.க.,வினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.விஜயகாந்தின் தே.மு.தி.க.,வை, தங்கள் கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தூதுவர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட, பல விதமான தந்திரங்களையும்
DMK upset,  Modi-vijayakanth, மோடி - விஜயகாந்த், தி.மு.க., அப்செட்

பிரபல சமூக வலைதளத்தில் உள்ள, தே.மு.தி.க.,வின் வலைப்பக்கத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், விஜயகாந்தும் சந்தித்துப் பேசிய படம் வெளியிடப்பட்டிருப்பது, தி.மு.க.,வினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

விஜயகாந்தின் தே.மு.தி.க.,வை, தங்கள் கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தூதுவர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட, பல விதமான தந்திரங்களையும் கையாண்டு வருகிறார். ஆனால், விஜயகாந்தோ, எதற்கும் பிடிகொடுக்காமல், இதோ... அதோ... என, இழுத்தடித்து வருகிறார். அதேநேரத்தில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., தலைவர்களும், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சமூக வலைதளத்தில், தே.மு.தி.க., சார்பில், வெளியிடப்பட்டுள்ள புகைப்படம், புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க, தி.மு.க., பகீரத பிரயத்தனம் செய்து வரும் நிலையில், மோடி விஜயகாந்த் சந்திப்பு தொடர்பான படம், வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பது, தி.மு.க.,வினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தே.மு.தி.க.,வுக்கு, www.dmdkparty.com என்ற இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் அறிவிப்புகள், அறிக்கைகள், கட்சி தலைமை சார்பில் நடத்தப்படும் விழா தொடர்பான படங்கள், அவ்வப்போது வெளியிடப்படும்.அத்துடன், தே.மு.தி.க., இணைய தளத்திற்கென, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், தனி வலைப்பக்கம் உள்ளது. அந்த வலைப்பக்கத்தில், தே.மு.தி.க., இணையதளத்தில் வெளியிடப்படும் படங்கள் மட்டுமின்றி, அவ்வப்போது பொதுமக்கள் பிரச்னை, விஜயகாந்தை சந்தித்து பேசும் அரசியல் தலைவர்களின் படங்களும், அது தொடர்பானகருத்துக்களும் வெளியிடப்படுகின்றன. தே.மு.தி.க., இளைஞர் அணி செயலரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷின், நேரடி கட்டுப்பாட்டில்தான், கட்சியின் இணையதளமும், பேஸ்புக் சமூக வலைப்பக்கமும் இயக்கப்படுகிறது.

இந்த வலைப்பக்கத்தில், தே.மு.தி.க., இணையதளம் சார்பில், நேற்று புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த புகைப்படமானது, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியும், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தும் சந்தித்துப் பேசியது தொடர்பானது.அதேநேரத்தில், தே.மு.தி.க., உடன், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, பா.ஜ., மேலிட பார்வையாளர், முரளீதர் ராவ், விரைவில் சென்னை வரவுள்ள நிலையில், மோடி விஜயகாந்த் படம் வெளியிடப்பட்டிருப்பது, அந்தக் கட்சியினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.இருந்தாலும், 'இவர் யாருடன் அய்யா கூட்டணி சேரப்போகிறார்; இந்தக் குழப்பு குழப்புகிறாரே' என, புலம்புகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

நமது நிருபர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X