சென்னை:நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்கள், 25 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான, மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து, நேற்று முன்தினம், ஆறு விசைப்படகுகளில், மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, இலங்கை கடற்படையினர், மீனவர்கள், 25 பேரையும் கைது செய்து, ஆறு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை, 27ல், நடக்கிறது. இதற்கு முன், சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தேன். பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக, தமிழக சிறைகளில் இருந்த, 130 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏழு படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, ஆறு விசைப்படகுகளில், மீன் பிடிக்கச் சென்ற, 25 மீனவர்களை, இலங்கை அரசு சிறை பிடித்துள்ளது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல், தமிழக மீனவர்களிடையே, கவலையை ஏற்படுத்தி உள்ளது. பேச்சுவார்த்தை, சுமூகமாக நடைபெற, இலங்கை சிறையில், ஏற்கனவே உள்ள, 64 மீனவர்கள், 69 படகுகள், நேற்று பிடிக்கப்பட்ட, 25 மீனவர்களையும் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.