கோவை: கேரள மாநிலத்தில், சுற்றுலா தளங்களை பார்வையிட வருவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அங்கு, புதிய சுற்றுலா தளங்களை அறிமுகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதற்காக, அம்மாநில சுற்றுலா துறையினர், அண்டை மாநிலங்களுக்கு சென்று, கேரள மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு வர அழைப்பு விடுத்து வருகின்றனர்.
கோவைக்கு, நேற்று வந்த, கேரள மாநில அரசின் சுற்றுலா துறை தகவல் தொடர்பு அதிகாரி, முரளிதரன் கூறியதாவது: கேரள மாநிலத்திற்கு சுற்றுலாத்தளங்களை, பார்வையிட வருவோரின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த, 2011 ல், 7.33 லட்சம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கேரளாவுக்கு வந்தனர். உள்நாட்டு சுற்றுலா பயணிகள், 93.88 லட்சம் பேர் வந்துள்ளனர்.கடந்த, 2012 ம் ஆண்டு, 1.1 கோடி, பயணிகள், பார்வையிட்டு இருப்பதாக, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், கேரள அரசுக்கு, நிகர வருவாய், 4,548 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், சுற்றுலா துறையால், நேரடியாகவும், மறைமுகமாகவும், அரசுக்கு கிடைத்த வருவாய், 21,125 கோடியை எட்டியுள்ளது.
இதனால், சுற்றுலா துறையை மேம்படுத்தி, அரசின் வருவாயை அதிகரிக்க, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. கேரளாவில் உள்ள, அனைத்து நீரோடை சார்ந்த இடங்களுக்கும், தடையின்றி இன்றி செல்ல, தண்ணீரில் ஓடும் விமான முறை, "முஸிரிஸ்' கோட்டையின் வரலாற்று மற்றும் கலாச்சார பெருமைகளை எடுத்துக்கூறுதல், "சீபிளேன்' எனப்படும், சர்வதேச விமான நிலையங்களில் இருந்து, சுற்றுலா தளங்களுக்கு செல்ல, பிரத்யேக விமான சேவையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதுதவிர, கிராமப்புறங்களில் தங்கியிருக்கும், மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளவும், மலைப்பகுதிகளுக்கு செல்லவும், "டிரைபிள் டிராவல்' எனும், புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை, அண்டை மாநிலங்களுக்கு எடுத்துக் கூறி, சுற்றுலாவுக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்படுத்த, சுற்றுலா துறை அதிகாரிகள் குழு சென்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.