தலைநகரான டில்லியில், போலீஸ் நிர்வாகம் மட்டும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. டில்லி முதல்வரான, அரவிந்த் கெஜ்ரிவால், 'மத்திய அரசு வசம் உள்ள போலீஸ் அதிகாரம், மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, வீதியில் இறங்கி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார். அவர், முதல்வருக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என, ஒரு தரப்பினரும், மாநில உரிமையை பெறுவதற்குதானே போராடினார் என, மற்றொரு தரப்பினரும் கருத்து சொல்கின்றனர். கெஜ்ரிவாலின் போராட்ட வழிமுறை சரியா, தவறா என, சமூக ஆர்வலர்கள் இருவர், தெரிவித்த கருத்துக்கள் இதோ:
டில்லியில், போலீஸ் யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட காலமாக உள்ளது. மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்ட ஒரு பகுதியின், போலீஸ் அதிகாரம், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த முக்கியமான கோரிக்கை குறித்து, பல விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கோரிக்கையின் நியாயத்தை ஏற்பவர்கள், அவரின் போராட்ட வடிவத்தால், குழம்பிப் போயுள்ளனர். முதல்வர் ஒருவரே, தெருவில் இறங்கி போராடலாமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். முதல்வர் ஒருவர், தினமும் அலுவலகம் செல்ல வேண்டும். எதிர்ப்புகளை அறிக்கைகளாக வெளியிட வேண்டும். இல்லையேல், பிரதமர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்பதே, இதுநாள் வரை நடைமுறையாக இருந்துள்ளது. அதற்கு மாறாக, முதல்வர் ஒருவர், தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு பதிலாக, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு, அரசை நிர்வகிக்க, ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில், ஆம் ஆத்மி செயல்படுகிறதோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. போலீஸ் துறை என்பதை, 'புனித பசு'வாக பாவித்து வருகின்றனர். எந்த தவறு செய்தாலும், போலீஸ் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே, இந்திய ஜனநாயகம். அதனால், அவ்வளவு சீக்கிரத்தில், டில்லி போலீசார் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடாது. டில்லி அரசுக்கு, போலீஸ் அதிகாரத்தையும் வழங்கி விடாது.
முத்துகிருஷ்ணன், சமூக ஆர்வலர்
டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றும் தெரியாதவர் அல்ல; ஐ.ஐ.டி.,யில் படித்த அவர், அரசு நிர்வாகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர். அப்படிப்பட்டவர், பயங்கரவாதியை போல செயல்படுகிறார்; தன்னைத்தானே, அராஜகவாதி என, அவர் அழைத்துக் கொள்வதும் சரியல்ல. உலக நாடுகள் பலவற்றிலும், தலைநகர பாதுகாப்பு என்பது, அந்நாட்டின் மைய அரசிடமே உள்ளது. அதுபோலவே, நம்நாட்டு தலைநகரான, டில்லியின் பாதுகாப்பும், மத்திய அரசிடம் உள்ளது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இதை மாற்ற வேண்டுமெனில், பார்லிமென்டில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். அதற்கான, பணிகளை ஒரு முதல்வர் செய்யாமல், மக்களைத் திரட்டி, வீதியில் இறங்கி போராடுவேன் என, கூறுவது, விந்தையாக உள்ளது. டில்லியில், அவர் அறிவித்த மின் கட்டண குறைப்பு, அனைவருக்கும் இலவச குடிநீர் போன்றவை மக்களை சென்றடையவில்லை. முன்னர் முதல்வராக இருந்த, ஷீலா தீட்சித் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, தேர்தலின் போது, 108 பக்க ஆதாரங்களை காட்டி, கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் மறைக்கவும், மக்களை திசை திருப்பவுமே, மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை, கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளார். 'அரசுகள், 'பந்த்' மற்றும் மக்களை பாதிக்கும் போராட்டங்களை நடத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஒருவரே போராட்டத்தை நடத்துவதும், மற்றவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுப்பதும், தேசத் துரோக செயல்களாகும். இதற்கு, உச்ச நீதிமன்றமே தன்னிச்சையாக, கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
பானு கோம்ஸ், சமூக ஆர்வலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE