லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, மதுரை ஆதீனம் தயார் செய்யப்படுகிறார். இதற்கான, 'அசைன்மென்டை' கூட்டுறவுத் துறை அமைச்சர், செல்லூர் ராஜு கச்சிதமாக முடித்துள்ளார்.
சமூக பிரச்னை முதல் இலங்கை தமிழர் பிரச்னை வரை, எதுவாக இருந்தாலும், 'கருத்து கந்தசாமி' யாக மாறி, தன் நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிடுவதில், மதுரை ஆதீனம், அதீத ஆர்வம் காட்டுவார். நித்யானந்தா மூலம் எழுந்த பிரச்னையால், வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், அறிக்கைகள் வெளியிடாமலும், சற்று 'அடக்கி வாசித்து' வந்தார். ஆனால், அவரது மறைமுக அரசியல், 'மூவ்'களில் இருந்து, 'முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும்' என்பதில், அவருக்கு உடன்பாடு இருந்தது வெளிப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில், மதுரையில் நடந்த பொங்கல் விழா ஒன்றில், 'சிறந்த நிர்வாக திறமையுள்ள முதல்வர் ஜெயலலிதா, நாட்டின் பிரதமர் ஆனால் நல்லது,' என, பேசி அரசியலில் அனலை மூட்டினார். இந்நிலையில், மதுரை நகரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அதிரடியாக பேசிவரும், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, நேற்று முன்தினம், ஆதீனம் பேச்சுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மடத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். 'லோக்சபா தேர்தலில், ஆன்மிகவாதிகள் மற்றும் மடாதிபதிகளிடம் சென்று அ.தி.மு.க.,விற்கு ஆதரவு கேட்க வேண்டும்' என, அமைச்சர் கேட்டதாகவும், அதற்கு, 'கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே, ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். பல மொழிகள் தெரிந்தவர், ஜெயலலிதா. அவர் பிரதமரானால் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்வர்' என, ஆதீனம் கூறியதாகவும் தகவல் பரவி உள்ளது. சந்திப்பு முடிந்ததும், வழக்கமாக கொடுக்கும் ஞானப்பாலை அமைச்சருக்கு ஆதீனம் வழங்கினார். மறுக்காமல், 'தங்கள் சித்தம்' என, அமைச்சரும் அடக்கமாக கூறி, ஞானப்பாலை பருகிவிட்டு, மடத்தை விட்டு 'ஜூட்' விட்டார். இவர்கள் சந்திப்பால், அ.தி.மு.க.,விற்கு ஆன்மிக ரீதியான பிரசாரத்திற்கு, ஆதீனம் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டார் என்ற கருத்து, மதுரை அ.தி.மு.க., வட்டாரத்தில் வலுத்துள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE