லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் விருப்பப்படி, தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு, நேற்று அறிவாலயத்தில், மனு தாக்கல் செய்தார்.
டி.ஆர்.பாலு, தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும், அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யாமல், தன் சொந்த ஊரான மன்னார்குடி அமைந்துள்ள, தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததும், தஞ்சாவூர் தொகுதியின், தற்போதைய எம்.பி.,யான, மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர், பழனிமாணிக்கம் கோபாலபுரம் இல்லத்திற்கு ஓடோடிச் சென்றார். அங்கு கருணாநிதியை சந்திக்க அனுமதி கோரினார். ஆனால், பழனிமாணிக்கத்தை உடனே சந்திக்காத கருணாநிதி, இரவு, 8:00 மணிக்கு வரும்படி சொல்லி, திருப்பி அனுப்பினார். இரவில், கருணாநிதியை சந்தித்த, பழனிமாணிக்கம், 'என் தொகுதியை கேட்டு, டி.ஆர்.பாலு, விருப்ப மனு தாக்கல் செய்வதா?' என, தன் ஆதங்கத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். 'கட்சியில், டி.ஆர்.பாலுவை விட, நான் சீனியர். தஞ்சாவூரில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். அதனால், என் தொகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்றும் கூறியுள்ளார். கருணாநிதியும், அவரை சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார். ஓரிரு நாளில், தஞ்சாவூரில் போட்டியிட, பழனிமாணிக்கம், விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE