தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரை தேர்வு செய்ய, நேற்று, வேட்புமனு தாக்கல் துவங்கியது. முதல் நாளான நேற்று காலை, தர்ம புரி மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த, பத்மராஜன், முதல் ஆளாக மனு தாக்கல் செய்தார். இவர், அனைத்து கட்சி தலைவர்களையும் எதிர்த்து, அனைத்து தேர்தல்களிலும், போட்டியிட்டுள்ளார். நேற்று, 157வது முறையாக, வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, தர்மபுரியைச் சேர்ந்த ஸ்ரீராமச்சந்திரன், 34, மனு தாக்கல் செய்தார். பிளஸ் 2 படித்துள்ளார்; மணமாகவில்லை. வீரவன்னியர் மக்கள் இயக்க நிறுவனரான இவர், கடந்த முறை நடந்த ராஜ்ய சபா தேர்தலிலும், சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட, 10 எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரை தேவை. அது இல்லாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இம்முறையும், எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரையின்றி, மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த சிறு பேட்டி:
எதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?
இது எனக்கு, 10வது தேர்தல். இரண்டாவது முறையாக, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தலில் போட்டியிடுவதால், நல்ல அனுபவம் கிடைக்கிறது. அனைவருட னும் பழக முடிகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், திருவாரூர் தொகுதியில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை எதிர்த்தும், ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்தும் போட்டியிட்டேன். திருவாரூர் தொகுதியில், மூன்றாம் இடம் பிடித்தேன். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம்.
மூன்றாம் இடம் பிடித்தீர்கள் என்றால், எவ்வளவு ஓட்டு பெற்றீர்கள்?
திருவாரூர் தொகுதியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 1.09 லட்சம் ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்து வந்த, அ.தி.மு.க., வேட்பாளர், 58,765 ஓட்டுகள் பெற்றார். நான் 1,741 ஓட்டுகள் பெற்று, மூன்றாமிடம் பெற்றேன். பா.ஜ., வேட்பாளர் கூட, எனக்கு அடுத்தே வந்தார்.
ராஜ்யசபா தேர்தலில், மனு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால், போட்டியிட, 10 எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை செய்ய வேண்டுமே?
வேட்புமனு தாக்கல், கடைசி நாளுக்குள், எம்.எல்.ஏ., ஆதரவை பெற்று விடுவேன். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் பேசி வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE