தே.மு.தி.க.,வுடன் நாளை; வைகோவுடன் இன்று சந்திப்பு : சென்னையில் 2 நாள் முகாம்| Dinamalar

தே.மு.தி.க.,வுடன் நாளை; வைகோவுடன் இன்று சந்திப்பு : சென்னையில் 2 நாள் முகாம்

Added : ஜன 23, 2014 | கருத்துகள் (1)
Share
தே.மு.தி.க.,வுடன் நாளை; வைகோவுடன் இன்று சந்திப்பு :  சென்னையில் 2 நாள் முகாம்

தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியை உறுதி செய்ய, மேலிட தலைவர் முரளீதர ராவ், நாளை சென்னை வருகிறார். இரண்டு நாட்கள், சென்னையில் முகாமிடும் அவர், விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரை சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளார். இந்த சந்திப்புக்கு பின், பா.ஜ., கூட்டணி முடிவாகும் என, தமிழக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.

ரகசிய பேச்சு : தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமையவிருக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., மற்றும் கொங்கு அமைப்புகள் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. தே.மு.தி.க., மற்றும் பா.ம.க.,வுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இதில், பா.ம.க., வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தே.மு.தி.க.,வின் வருகை மட்டும் இழுபறியில் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மலேசியா சென்றிருந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு, சென்னை திரும்பினார். ஏற்கனவே, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர், அவரை இருமுறை சந்தித்துப் பேசி உள்ளனர். விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தபோதும், இரு கட்சிகளுக்கு இடையேயான பேச்சு தொடர்ந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள, பா.ஜ., குழுவினர், நேற்று, தே.மு.தி.க., இளைஞரணி தலைவர் சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதேபோல், பா.ம.க., தரப்பில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியுடன், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பச்சைக்கொடி : ஆரம்பத்தில், ஜாதி அமைப்புகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என விரும்பிய, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றவர்களும், இப்போது, அன்புமணி கருத்தை ஏற்று, பா.ஜ., கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டிஉள்ளதாக, அக்கட்சி வட்டாரம் கூறுகிறது.
அதேபோல், தே.மு.தி.க.,வுடன் கூட்டு சேர்வதற்கு, பா.ம.க.,வுக்குள் இருந்த எதிர்ப்பும், அன்புமணி முயற்சியால் அடங்கியுள்ளது. தே.மு.தி.க., வருவதால், கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என, பா.ம.க.,வும் கருதத் துவங்கியுள்ளது.

நம்பிக்கை : இப்படி பா.ஜ.,வுக்கு சாதகமான சூழல், இந்த கட்சி வட்டாரத்தில் நிலவுவதால், இன்று அல்லது நாளை சென்னை வரும் முரளீதர ராவ், விஜயகாந்தையும். ராமதாசையும் சந்தித்துப் பேசி, கூட்டணியை உறுதி செய்வார் என, பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், ம.தி.மு.க., தலைவர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர். இம்மாத இறுதிக்குள், கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும்.
நரேந்திர மோடி பங்கேற்கும், பிப்., 8ம் தேதி பொதுக் கூட்டத்தில், கூட்டணி தலைவர்களை மேடை ஏற்ற வேண்டும் என்ற இலக்குடன், தமிழக பா.ஜ., கூட்டணி பேச்சில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, முன்னாள் மாநில தலைவர், கே.என்.லட்சுமணன் தலைமையில், அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவினர், பேச்சுவார்த்தையை நேற்று துவங்கினர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன், பா.ஜ., குழுவினர், நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திப்பு : நேற்று, இந்திய ஜனநாயக கட்சி தலைவரை சந்தித்து பேசியுள்ளனர். இன்று, ம.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வுடன் பேச்சு நடத்துகின்றனர். இந்நிலையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நேற்று காலை, ம.தி.மு.க., தலைவர் வைகோவை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X