இரண்டு லோக்சபா தேர்தல்களில் நீடித்த உறவை, தி.மு.க., முறித்துக் கொண்டதால், தமிழகத்தில், காங்கிரசுக்கான கூட்டணி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனாலும், பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சியில், காங்கிரஸ் தலைமை ஆர்வம் காட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், திடீரென சென்னை வந்து, கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
அப்போது குலாம் நபி ஆசாத், கருணாநிதியிடம், 'காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்கிற தி.மு.க.,வின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, கேட்டுக் கொண்டதாகவும் ஆனால், அதற்கு கருணாநிதி ஒப்பு கொள்ளவில்லை எனவும், செய்தி பரவியது. அதன் பின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் ஆதரவை, தி.மு.க., கேட்டுப் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆதரவு கேட்கப் போவதில்லை என, கருணாநிதி அறிவித்து விட்டார்.இந்நிலையில், மத்திய அமைச்சர் வாசன், கருணாநிதியிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் பேச்சின் போது, 'நீங்கள், தே.மு.தி.க., உடன் அணிசேர விரும்புகிறீர்கள். அதற்காக, பகிரங்கமாக அழைப்பும் விடுத்துள்ளீர்கள். தே.மு.தி.க.,வை, தி.மு.க., கூட்டணிக்கு, நாங்கள் கொண்டு வருகிறோம். நீங்கள் மீண்டும் காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்று கட்சிகளும் சேர்ந்து, வலுவான அணி அமைக்கலாம்' என, கருணாநிதியிடம், வாசன் யோசனை கூறியதாக, அறிவாலய வட்டாரம் கூறுகிறது.
அதற்கு கருணாநிதி, 'காங்கிரசுடன் இனி கூட்டு சேர வாய்ப்பு இல்லை. ஒருவேளை நீங்கள் (வாசன்) தனியாக வந்தால், கூட்டுசேர வாய்ப்பு வரலாம்' என, கூறியதாக, காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கனிமொழி சந்தித்து பேசியதாகவும், ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு தர வேண்டும் என, கோரியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு, தி.மு.க., தரப்பில், மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனால், என்ன நடக்கிறதுஎன்று புரியாமல் இரு கட்சி யினரும் குழம்பி தவிக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE