காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் ஜனநாயக ரீதியில் செயல்படுவதாககூறி வந்தாலும், உண்மை நிலை வேறு. நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே, இதுவரை கட்சி இருக்கிறது; இனிமேலும் இருக்கும்.சமீப காலமாக, அரசியல் களங்களில், எதிர்பார்த்த பாதிப்பை, ராகுல் ஏற்படுத்தாததால், பொதுமக்களின் கவனம், ராகுலின் சகோதரி, பிரியங்கா பக்கம் திரும்பி உள்ளது. பாட்டி இந்திராவையே பிரியங்கா உருவத்தில் காண்பதாக சிலர் கூறிக்கொள்வது உண்டு.
திடீர் ஆலோசனை:
ஆனால், இதுவரை அரசியல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்த பிரியங்கா, சமீபத்தில் காங்., மூத்த தலைவர்களை திடீரென்று சந்தித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, பிரியங்காவை முன்னிலைப்படுத்த அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதிலிருந்து தீவிர அரசியலில் பிரியங்கா ஈடுபட தயாராகி விட்டார் என, தெரிகிறது.புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.கட்சியில் நட்சத்திர அந்தஸ்தில் வலம் வருபவர் பிரியங்கா. அவரை முன்னிலைப்படுத்தினால், கட்சியின் மீது புதிய பார்வை உண்டாகும்; மதிப்பு கூடும் என, காங்., மேலிட தலைவர்கள் கருதுகின்றனர்.லோக்சபா தேர்தலில் போட்டியிட பிரியங்கா விரும்பவில்லை. ஆனால், அவருக்கு கட்சியில் பெரிய பதவி அளித்து, பிரசாரத்தில் ஈடுபட வைக்க திட்டமிட்டுள்ளனர்.
புதிய விடிவு தேவை:
பிரியங்கா பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. ஆனால், சோனியா, அகமது படேல், ஜனார்த்தன் திரிவேதி பங்கேற்றனர். ஊழல், விலைவாசி உயர்வு, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என, பல்வேறு முக்கியமான விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பல பிரச்னைகளில் சிக்கியுள்ள, காங்., கட்சிக்கு புதிய விடிவு தேவைப் படுகிறது. புது வரவான ஆம் ஆத்மி கட்சியும், காங்.,கிற்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்தும், அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் புதிய நட்சத்திரங்கள், மக்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர். எனவே காங்., தலைவர்கள் பலர், தீவிரஅரசியலுக்கு பிரியங்கா வர வேண்டும் என, வற்புறுத்துகின்றனர்.
சோனியாவின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருதியும், அடுத்த பெண் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசார் உள்ளனர்.பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீதும் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தன் கணவர் மீது குறை கூறுவதை தடுக்கவும், பிரியங்கா தீவிர அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயமிருக்கிறது.இதற்கிடையில், மற்றொரு மறைமுகமான காரணமும் கூறப்படுகிறது.ராகுல் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரியங்காவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேரு குடும்பத்தின், அடுத்த தலைமுறை வாரிசுகள் அவர்களே.
ராகுலுக்கு போட்டி?
பிரியங்காவை முன்னிலைப்படுத்தினால் தான், பிற்காலத்தில் அவரது குழந்தைகளை கட்சிக்குள் நுழைத்து, தலைமை பொறுப்புக்கு கொண்டு வர முடியும் எனவும், பிரியங்காவின் கணவர் வீட்டார் கருதுகின்றனர். எது எப்படியோ, விரைவில் பிரியங்கா தீவிர அரசியலுக்குள் குதித்து, வாரிசு அரசியலை தொடர்வார் என்கிற சூழ்நிலை உருவாகி உள்ளது.அப்படி நடக்கும் பட்சத்தில் அது,ராகுலுக்கு போட்டியாக அமையவும் வாய்ப்பிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE