பா.ஜ., தலைவர்களுக்கு, வறுத்த முந்திரி பருப்பு, மில்க் ஸ்வீட், சூடான காபி கொடுத்து, கூட்டணியை உறுதி செய்த, ம.தி.மு.க., தலைவர் வைகோ, ஒன்பது தொகுதிகளுக்கு குறி வைத்து உள்ளார்.
பா.ஜ., - ம.தி.மு.க., கூட்டணியை முடிவு செய்வதற்கான, அதிகாரப்பூர்வ சந்திப்பும், பேச்சு வார்த்தையும், நேற்று, ம.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான பா.ஜ., குழுவினரை, சால்வை அணிவித்து வரவேற்ற வைகோ, அவர்களுக்கு, வறுத்த முந்திரி, மில்க் ஸ்வீட் மற்றும் காபி கொடுத்துஉபசரித்தார்.
நெருங்கிய நட்பு : பின், பா.ஜ., தலைவர்கள் மத்தி யில், வைகோ பேசியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும், எனக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அவர் பிரதமராக இருந்தபோது, நான் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி னார். இலங்கை தமிழர் பிரச்னை, நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்கு விற்பனை விவகாரம், கன்னியாகுமரியில் காமராஜர் மணி மண்டபம் அமைக்கும் விவகாரம் என, நான் வலியுறுத்தியதை எல்லாம் செயல்படுத்தினார்.
பல ஆண்டு பந்தம் : அந்த வகையில் பா.ஜ.,வுக்கும் ம.தி.மு.க.,வுக்கும் பந்தம் பல ஆண்டுக்குரியது.
நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி. அவர் தான் அடுத்த பிரதமர். அவர் ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்ய, நாங்கள் உறுதுணையாக இருப்போம். எந்த நேரத்திலும் தி.மு.க., - அ.தி.மு.க., நிழலை கூட அண்ட மாட்டோம். இவ்வாறு, வைகோ பேசியதாக, ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு முன், வைகோவும், பொன்.ராதாகிருஷ்ண னும், 20 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, ஒன்பது தொகுதிகளில் போட்டியிட, ம.தி.மு.க., விரும்புவதாக, வைகோ கூறியதாக தெரிகிறது.
முடியாத நிலையில் : இதற்கு பதில் அளித்த, பொன்.ராதாகிருஷ்ணன், "இப்போது தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய முடியாது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியாத நிலையில், எந்த உத்தரவாதமும் தர இயலாது. முதலில் கூட்டணியை உறுதி செய்து கொள்வோம். பின், தொகுதி எண்ணிக்கை பற்றி பேசுவோம்' என, பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக, பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் சேர்ந்து செயல்படுவது என, முடிவு செய்துள்ளோம். மற்ற விஷயங்களை பொதுவாக பேசினோம். குறிப்பிட்டு எந்த விஷயம் பற்றியும் பேசப்படவில்லை. மற்ற கட்சி தலைவர்களையும் சந்தித்த பின், அடுத்த கட்டமாக, தொகுதி பங்கீடு பேச்சு துவங்கும்,'' என்றார். இதற்கிடையில், பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,வுடனான பேச்சுவார்த்தை தள்ளிப் போயுள்ளது. ஆனாலும், இக்கட்சித் தலைவர்களுடன், தொலைபேசி யில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விஜயகாந்த், ராமதாசை சந்திக்க, பா.ஜ., மேலிட தலைவர் முரளீதர் ராவ், இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால், டில்லியில் நடக்கும் நிகழ்ச்சி காரணமாக, அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நாட்களில் அவர் சென்னை வருவார் என்றும், அப்போது பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., தலைவர்களை சந்தித்துப் பேசுவார் எனவும், பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டணி பேச்சில், பா.ஜ., தரப்பில், பொன் ராதாகிருஷ்ணன் தவிர, பொதுச் செயலர், மோகன் ராஜுலு, செயலர் வானதி சீனிவாசன், பா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர், கே.என்.லட்சுமணன் ஆகியோரும், ம.தி.மு.க., தரப்பில், வைகோ, துணை பொதுச்செயலர், மல்லை சத்யா, பேச்சுவார்த்தைக் குழுவினர் மாசிலாமணி, கணேசமூர்த்தி எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர்.காலை, 11:00 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, 12:40 வரை நீடித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE