'நம்நாட்டில், மத்தியில், நீண்ட காலம் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் கட்சி, வறுமையை ஒழிக்கத் தவறி விட்டது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வறுமையை ஒழிப்பதையே, முக்கிய திட்டமாகவும் அறிவித்து வருகிறது. நம்நாடு ஏழை நாடு அல்ல; அரசியல் லாபத்திற்காகவே, மக்கள் ஏழைகளாக வைக்கப்பட்டுள்ளனர். எனக்கு, 60 மாதங்கள் வாய்ப்பு கொடுங்கள்; மக்களுக்கு அமைதியான, மகிழ்ச்சியான, வறுமை இல்லாத வாழ்க்கையை தருவேன்' என, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார். பல ஆண்டுகளாக பதவி வகித்த காங்கிரசால், சாதிக்க முடியாததை, இவர் சாதித்து விடுவாரா அல்லது தேர்தலுக்காக வீராவேசமாக வெளியிடும் வெறும் காகித அறிக்கையா என்பது தொடர்பான, இரு அரசியல் பிரபலங்களின் முட்டல் மோதல் இதோ:
'வாஜ்பாய் ஆட்சியில் சொல்லியதை, செய்து காட்டினோம். அதேபோல், இப்போது சொல்வதை, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் செய்து முடிப்போம்' என, அறிவித்துள்ளார், பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி. வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது தான், 35 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத, தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாட்டின் வடக்கையும், தெற்கையும், கிழக்கையும் மேற்க்கையும் இணைக்கும் நெடுஞ்சாலைகளை அமைத்தோம். கிராம சாலைகள் போடப்பட்டன. இதன்மூலம், வேலைவாய்ப்பு அதிகரித்து, தனி நபர் வருமானம் பெருகியது. வறுமை குறைந்தது. அதேபோல், நதிகளை இணைக்கும் திட்டத்தை, 10 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என, அறிவித்தோம். ஆனால், அதற்கு சாத்தியமில்லாமல் போனது. அத்திட்டம் நிறைவேறி இருந்தால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், முப்போகம் பயிர் விளையும் சூழ்நிலை உருவாகி இருக்கும். அத்துடன், வேளாண்மை உற்பத்தி அதிகரிப்பதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும், பல கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றிருப்பர். பா.ஜ., ஆட்சியில், 'அந்தியோதயா அன்னயோஜனா' திட்டம் மூலம், குடும்பம் ஒன்றுக்கு, மாதத்துக்கு, 35 கிலோ அரிசி வழங்கினோம். நாட்டின் வளத்தை மேம்படுத்தவும், இயற்கை வளத்தை முழுமையாக பயன்படுத்தவும், நரேந்திர மோடி தலைமையில், புதிய ஆட்சி அமைய நடவடிக்கை எடுப்போம். அதன்மூலம், மக்களின் வருமானம் உயர்ந்து, வறுமை ஒழியும். இதை, குஜராத் மாநிலத்தில், சாதித்துக் காட்டிய, மோடி, இந்தியா முழுவதும், அந்தச் சாதனையை நிகழ்த்த வாய்ப்பு கேட்கிறார். அந்த வாய்ப்பை கொடுத்து, அவர் செய்து முடிப்பதற்குள் தேவையற்ற விமர்சனம் கூடாது.
கே.டி.ராகவன், செயற்குழு உறுப்பினர், தமிழக பா.ஜ.,
குஜராத்தில், 15 ஆண்டுகள் முதல்வராக இருக்கும், நரேந்திர மோடி, அம்மாநிலத்தை, தமிழகம், பஞ்சாப், கர்நாடகம், ஆந்திரா, அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை விட, எந்த வகையில் முன்னேற்றியுள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தது முதல், வளமான பூமியாகவே குஜராத் உள்ளது. முகலாயர்கள் ஆட்சியின்போது, ராணுவ செலவுகளுக்கு பணம் தரும், கருவூலமாக குஜராத் இருந்தது. இதனால், அம்மாநிலத்தில், தங்களின் குடும்ப வாரிசுகளையே, கவர்னர்களாக முகலாயர்கள் நியமித்தனர். எனவே, குஜராத் என்பது, பல நூறு ஆண்டுகளாகவே, வளமான மாநிலமாக உள்ளது. மோடி ஒன்றும், குஜராத்தை வளமாக்கவில்லை.
தமிழகத்தில், விவசாயிகளுக்கும், குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுபோன்ற, சமூக நலத் திட்டங்கள், குஜராத்தில் அமல்படுத்தப்படுகிறதா. காங்கிரஸ் தலைமையிலான, 10 ஆண்டுகால ஆட்சியில், ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக, நம்நாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு அடுத்ததாகவும், சீனாவுக்கு நிகராகவும், வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி, பல மொழி, இனங்கள் உள்ள, நம்நாட்டில், பல சவால்களை சந்தித்து வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளோம். ஆனால், மோடியின் அறிவிப்புகள் எல்லாம், விளம்பரங்களாகவே இருக்கிறது. குஜராத்தில், அவர் என்ன செய்தார் என்பதை வெளியிட முடியாதவர்கள், 'நாட்டில், 60 மாதத்தில், வறுமையை ஒழிப்போம்' என, முழங்குகின்றனர். அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால், நாட்டில் அமைதி நிலவுவதே முதலில் கடினம். அதற்கு பின்னரே, வறுமையை ஒழிப்பது, வளர்ச்சியை ஏற்படுத்துவது எல்லாம் நடக்கும்.
கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE