எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? ஜி.கிருஷ்ணசாமி| Dinamalar

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? ஜி.கிருஷ்ணசாமி

Added : ஜன 26, 2014 | கருத்துகள் (4) | |
'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு, பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான், ஏமாற்றாதே ஏமாறாதே' என்னும் முதுமொழிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் உள்ளது, தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை.காங்கிரசுடன் எந்தக் கட்சியும், கூட்டு சேரத் தயாராக இல்லாத நிலை, காங்கிரஸ் கட்சியின் இன்றைய பரிதாபகரமான நிலையை, அம்பலப்படுத்துவதாக உள்ளது. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால்,
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? ஜி.கிருஷ்ணசாமி

'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு, பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான், ஏமாற்றாதே ஏமாறாதே' என்னும் முதுமொழிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் உள்ளது, தற்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை.


காங்கிரசுடன் எந்தக் கட்சியும், கூட்டு சேரத் தயாராக இல்லாத நிலை, காங்கிரஸ் கட்சியின் இன்றைய பரிதாபகரமான நிலையை, அம்பலப்படுத்துவதாக உள்ளது. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால், தங்கள் கட்சியின் மீதும், தீட்டுப்பட்டு விடும் என்கிற, பிற கட்சியினரின் அச்சம் தான் இதற்குக் காரணம். பல ஆண்டுகளாக, நடைமுறைக்கு ஒத்துவராத, மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்தியும், மக்களை ஏமாற்றி, கோடிகள் சுருட்டியும், காங்கிரஸ் கட்சியின் பிரபலங்கள் பலர், அகில இந்திய அளவில் தங்களை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு, துரோகம் இழைத்தது தான் அக்கட்சியின் முகமூடி கிழிந்து, தன் சுயரூபத்தைக் காட்டி நிற்க காரணம். ஜனநாயகக் காவலர்களான அரசியல்வாதிகள், வழக்கம் போல் தேர்தலில் அமோக விளைச்சலை எடுப்பதற்காக, பல்வேறு உக்திகளைக் கையாளத் துவங்கிவிட்டனர். இம்முயற்சியில் தேசியக் கட்சிகளோடு, சரி சமமாகக் கச்சைக் கட்டி, மாநில கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இப்போட்டியின் முன்னோட்டமாக, பா.ஜ., பிற கட்சிகளை முந்திக் கொண்டு, நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலைச் சந்தித்து, அதில் மகத்தான வெற்றியைப் பெற்று, தன் பலத்தையும், செல்வாக்கையும் நிரூபித்துள்ளது.


நாட்டு மக்களும், ராகுல் விசுவாசிகளும், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில், ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று, ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அனைவரும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடையும் விதத்தில், ராகுல் பிரதமர் பதவிக்கு, வேட்பாளராக அறிவிக்கப்படாமல், தேர்தல் பிரசாரக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தேர்தலுக்கு முன், பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் வழக்கம், நடைமுறையில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இத்தலைகீழ் முடிவுக்கு, இரண்டு முக்கிய விஷயங்கள் காரணிகளாக இருக்கலாம். ஒன்று, பல ஊழல்களில் சிக்கி, வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மக்களின் ஏகோபித்த அதிருப்திக்கும், வெறுப்புக்கும் ஆளாகியிருக்கும் தற்போதைய சூழலில், தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது. மற்றொன்று காங்கிரஸ் தேர்தலில், தோல்வியை சந்திக்கும் தருணத்தில், நேருவின் பரம்பரையைச் சேர்ந்த ராகுல், அரசியல் சன்னியாசத்திற்கு அத்தோல்வி வழிவகுத்துவிடும் என்கிற பயம். காரணம் எதுவாக இருப்பினும், நேற்று வரை கூரை மீது, கம்பீரமாக ஏறி நின்று, கொக்கரித்த சேவல் இன்று, நரேந்திர மோடிக்கு பயந்து, கூண்டுக்குள் பதுங்கிக் கொண்டது என்பதுதான் உண்மை.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரின் பேச்சுக்களும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியோ, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கான தீர்வு என்ன என்பது பற்றியோ, அமையவில்லை. நரேந்திர மோடியை குறி வைத்து தாக்கும் முயற்சியாக இருந்ததை மட்டுமே காண முடிந்தது. ஆனால், சிறுபான்மையினரின் பாதுகாவலன் காங்கிரஸ் என, அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் ஒரே குரலில் கூறியுள்ளனர். நாட்டில் அமைதியையும், பல்வேறு பிரிவினரிடையே ஒற்றுமையையும் நிலைநாட்ட விரும்பும், ஒரு கட்சி, நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும், சமமாகப் பாவிக்கும் தன்மையுடையதாக இருத்தல் அவசியம் என்பதை உணர்த்துவதை விடுத்து, சிறுபான்மை, பெரும்பான்மை மக்களிடையே துவேஷத்தை வளர்த்து, அதில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியால், முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினரின் இந்த நடவடிக்கை, நாட்டின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் முயற்சியாகவே அமையும்.


கடந்த காலத்தில், இந்திய மக்கள் பல்வேறு தருணங்களில் பல்வேறு மாநிலங்களில், வன்முறைச் சம்பவங்களையும், உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளதை, யாரும் மறுத்துவிட முடியாது. இவ்வன்முறை சம்பவங்கள், பா.ஜ., ஆட்சியிலிருந்த மாநிலங்களில் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி உட்பட இதர கட்சிகள் ஆட்சி புரிந்த, புரிந்து வருகிற மாநிலங்களிலும் நடந்துள்ளன. பாகிஸ்தானின் உதவியுடன், இந்திய மண்ணில் செயல்படும் சில மதவாத அமைப்புகள் தொடர்ந்து, இச்சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய வன்முறைகளை, இந்திய குடிமக்களான அனைத்து சமயங்களையும் சேர்ந்த, மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே, தடுத்து நிறுத்த முடியும். காங்கிரஸ் கட்சி, மதச் சார்பின்மை, சிறுபான்மை, பெரும்பான்மை போன்ற யதார்த்தமற்ற, தேவையற்ற பிரசாரங்களைக் கைவிட்டு, அனைவரும் இந்தியர் என்னும் எண்ணம் வளர, நடவடிக்கைகள் மேற்கொண்டால், அதுவே இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் காங்கிரஸ்காரர்கள் செய்யும் மகத்தான பணியாக இருக்கும். வரலாறு தெரியாத காங்கிரஸ்காரர்களும், அவர்களது கூட்டாளிகளும், கண்ணை மூடிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ்.,யையும், பா.ஜ.,வையும் தேசத்தை அழிக்கும் சக்திகள் என்று, பல்லவி பாடுவது அபஸ்வரமே தவிர, நாட்டின் மீது உண்மையான பற்று கொண்டவர்களின் தேசிய கீதம் ஆகாது. காந்திஜி, கோட்சே என்னும் கொடியவனால், சுட்டுக் கொல்லப்பட்டதையும், நேரு குடும்பத்தினர் நாட்டிற்காக செய்த தியாகங்களையும், சமயச் சார்பின்மையையும் பேசிப் பேசியே, இன்னும் இந்திய வாக்காளர்களை ஏமாற்ற நினைத்தால், காங்கிரஸ் இந்திய அரசியல் களத்திலிருந்து முற்றிலுமாக துடைத்து, எறியப்பட்டு இருந்த இடம் தெரியாமல் போகும் நிலைதான் ஏற்படும்.


காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட, 60 ஆண்டு வரலாற்றில், அது நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை என்பது, இந்திய மக்கள் தொகையில், 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை இன்று வரை கைக்கும், வாய்க்கும் எட்டாத கபோதிகளாக வைத்திருப்பதும், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும், அதிகார வர்க்கத்தினரும் கோடீஸ்வரர்களாக வலம் வருவதும் தான். இன்று இளைஞர்களிடம், அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்று, சில மத்திய அமைச்சர்கள் கூறிவருவது, நாட்டுநலனில் அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையால் அல்ல. ராகுல், அவருக்குத் துணையாகத் தங்கள், வாரிசுகளையும், வருங்கால இந்திய இளவரசர்களாக ஆக்கும் முயற்சியே தவிர, வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் பல கோடி இந்திய இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அல்ல. இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களில் வசிக்கும், 80 கோடிக்கும் அதிகமான, படிக்காத ஏழை இளைஞர்கள், தாம் வாழும் கிராமங்களில் வேலை கிடைக்காத காரணத்தால், நகரங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கு கூலி வேலை பார்ப்பவர்களாக ஆகியிருப்பதும், படித்துப் பட்டம் பெற்ற, பல லட்சம் இளைஞர்கள், இந்தியாவில் வேலை கிடைக்காது, பல வெளிநாடுகளில் மூன்றாம் தர குடிமகன்களாக வாழ்ந்து வருவதும், நாம் கண்கூடாகக் காணும் காட்சி. இவர்களின் இந்த ஏமாற்று வேலைகள் எல்லாம், தேர்தலில் எடுபடப் போவதில்லை. இ-மெயில்: krishna_samy2010@yahoo.com


ஜி.கிருஷ்ணசாமி, எழுத்தாளர், சிந்தனையாளர், கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X