உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம்| Industrial sector and economic recession | Dinamalar

உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம்

Updated : ஜன 26, 2014 | Added : ஜன 26, 2014 | கருத்துகள் (7) | |
எந்த ஒரு நாட்டிலும், வலுவான உற்பத்தி துறையே, பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். நம் நாட்டில், ஐ.டி., போன்ற சேவை துறை தொழில்கள் மட்டுமே, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கி உள்ளன.இதனால், செலவு செய்து, ஆங்கில திறனுடன் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவர்களுக்கே, நடுத்தர வர்க்கத்தில் புக வாய்ப்பு உருவாகிறது. இதுவே, உற்பத்தி துறை செழித்தால், பள்ளி
உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம்

எந்த ஒரு நாட்டிலும், வலுவான உற்பத்தி துறையே, பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். நம் நாட்டில், ஐ.டி., போன்ற சேவை துறை தொழில்கள் மட்டுமே, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கி உள்ளன.

இதனால், செலவு செய்து, ஆங்கில திறனுடன் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவர்களுக்கே, நடுத்தர வர்க்கத்தில் புக வாய்ப்பு உருவாகிறது. இதுவே, உற்பத்தி துறை செழித்தால், பள்ளி கல்வி முடித்தவர்களும், பட்டய படிப்பு படித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தில் புகும் சூழல் உருவாகும். நடுத்தர வர்க்கம் விரிவடைவதோடு, சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும், சம வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகும்.ஜெர்மனி போன்ற, உற்பத்தி சார்ந்த நாடுகளில் இதுதான் நிலை.ஆனால், நம் நாட்டில் உற்பத்தி துறை முடமாக உள்ளது என்றால், அது மிகையாகாது. இந்த துறைக்கு, கிட்டத்தட்ட, புதிய முதலீடுகளே இல்லை. ஏற்கனவே, இந்த துறைக்காக உத்தேசிக்கப்பட்ட, 10 லட்சம் கோடி ரூபாய் தனியார் மற்றும் அரசு முதலீடுகளும் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

இன்றைய நிலையில் ஒரு அனல் மின் நிலையம் தொடங்க வேண்டுமானால், 118 அரசு துறைகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதில், ஏதேனும், ஒரு துறை ஒப்புதல் மறுத்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஸ்தம்பித்து விடும்.
இப்படி பல முட்டுக்கட்டைகளை தாண்டி, ஒரு உற்பத்தி தொழில் தொடங்கப்பட்டால், அது ஏறத்தாழ, 70 சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்; ஆண்டுதோறும், 100க்கும் மேற்பட்ட அறிக்கைகள் மற்றும் விவரங்களை அரசு துறைகளிடம், தாக்கல் செய்ய வேண்டும்.


அச்சுறுத்தும் சூழல்:

இதனால், தொழில் முனைவோர், அரசுக்கு விவரம் கொடுப்பதே, தங்களின் முக்கிய பணியாக செய்ய வேண்டிய, இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மேலும், அந்த, 70 சட்டங்களில், பல அடுக்கில் அதிகாரிகள், முதலீட்டாளரை கைது செய்யவோ அல்லது, தொழிற்சாலையை மூடவோ அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் சூழலால், உற்பத்தி துறையில் முதலீடு செய்வதை பற்றி சிந்திக்கவே, பெரும்பாலானோர்
அஞ்சுகின்றனர்.

கடந்த, 1991ல், பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது வரை, பொருளாதாரத்தில், உற்பத்தி துறையின் பங்கு, 15 முதல், 16 சதவீதமாகவே உள்ளது. இதில், பெரிய முன்னேற்றமே இல்லை. 2006ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கை, 10 ஆண்டுகளில், 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, ஒரு இலக்கு நிர்ணயித்தது. இதற்கு, பெருமளவில் பொருளாதார சீர்திருத்தம் தேவைப்பட்டது.அதாவது, மின்சாரம், கட்டுமான பணிகள், துறைமுகம், சாலை, ரயில்வே, தொழிலாளர் திறன் மேம்படுத்துதல், வங்கி கடன் மற்றும் தொழில் துறையில் அரசு குறுக்கீட்டை குறைத்தல் போன்றவை குறித்து, புதிய அணுகுமுறைகள் தேவைப்பட்டன.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை, தற்போது, முடங்கி உள்ள, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் காட்டுகின்றன. இதற்கு, உலக பொருளாதாரத்தை, காங்கிரஸ் மந்திரிகள், கச்சிதமாக கைகாட்டுகின்றனர். அது எவ்வளவு தூரம் உண்மை?கடந்த, 2003ல் இருந்து, 2008 வரையிலான காலகட்டத்தை, உலக பொருளாதார வரலாற்றில், ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். அந்த காலகட்டத்தில், உலகில் உள்ள, 196 நாடுகளில், 180 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பாதையில் சென்றன. அதில், 114 நாடுகள், 2007-08ல், 5 சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடித்தன; அவற்றில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இந்த பொற்காலம், 2009 வரை தொடர்ந்தது.


பெரும் தவறு:

சுருங்கச் சொன்னால், வளர்ச்சிக்காற்று அடிக்கும் போது, விரித்த பாய்மரங்களோடு, எந்த சிரமமும் இல்லாமல், இந்திய பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் நகர்ந்தது. இது, மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கை ஆற்றலாலும்; சிதம்பரத்தின் சாதுர்யத்தாலும்; மாண்டேக் சிங் அலுவாலியாவின் முற்போக்கு சிந்தனையாலும், சாத்தியமானதாக பறைசாற்றப்பட்டது.ஆனால், இதே விவேகர்களால், 2008க்கு பின், பெருமளவு வளர்ச்சியை கொடுக்க முடியவில்லை. ஏனெனில், வளர்ச்சிக்காற்று வீசாத காலங்களிலும், இந்திய பொருளாதார கப்பல், முன்னேறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செய்ய தவறி விட்டனர். இது, அவர்கள் செய்த பெரும் தவறு.அடுத்து வரும் அரசாவது உலக பொருளாதாரத்தை கை காட்டாமல், உற்பத்தி துறைக்கு வேண்டிய சீர்திருத்தங்களை கையாண்டு, அரசு குறுக்கீட்டை பெருமளவு குறைக்க வேண்டும். இது நடக்காவிட்டால், இந்தியாவின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, பணவீக்கம் என, மொத்த பொருளாதாரமுமே பெருமளவில் பாதிக்கப்படும்.

எம்.ஆர். வெங்கடேஷ், பட்டய கணக்காளர் மற்றும் பொருளாதார நிபுணர்

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X